×

மூதாட்டியை கழுத்தறுத்து கொன்ற பட்டதாரி ஆசிரியர் அதிரடி கைது: 1000 பேரின் கைரேகைகளை ஒப்பிட்டு பிடித்த போலீஸ்

மேட்டூர்: மேட்டூர் அருகே, 9 மாதத்திற்கு முன்பு மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பட்டதாரி ஆசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சினிமா பாணியில் 1000 பேரின் கைரேகைகளை ஒப்பிட்டு பார்த்து, தனிப்படை போலீசார் பிடித்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்துள்ள பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (70). இவரது மனைவி அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு மல்லிகா (45) என்ற மகளும், பிரகாஷ் (40) என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியே வசிக்கின்றனர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இரவு, தனது வீட்டில் அத்தாயம்மாள் படுத்து தூங்கினார். பக்கத்தில் உள்ள கொட்டகையில் ராமசாமி தங்கினார். அடுத்தநாள் காலையில், அத்தாயம்மாள், கட்டிலில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது காதில் கிடந்த தோடு மற்றும் வீட்டின் பீரோவில் இருந்த ரூ. 1.10 லட்சம் ஆகியவை கொள்ளை போயிருந்தது. இதுபற்றி கொளத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும் 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.

இத்தனிப்படையினர் அத்தாயம்மாளின் குடும்பத்தினர் மற்றும் அவரது வீட்டில் கழிவறை கட்டிக்கொடுத்த தொழிலாளர்கள், அப்பகுதியில் சுற்றித்திரிந்தவர்கள், பழைய குற்றவாளிகள் என 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தனர். மேலும், பீரோவில் பதிவாகியிருந்த கைரேகையை வைத்து கொண்டு, சந்தேகத்தின் பேரில் 1000 பேரின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு விசாரித்தனர். அதில், தனிப்படை போலீசாருக்கு ஒரு துப்பு கிடைத்தது. ராமசாமி வீடு கட்டும்போது, கட்டுமான வேலைக்கு வந்த தொழிலாளி ஒருவரின் கைரேகையோடு, அது ஒத்துபோனது. விசாரணையில் அவர், கொளத்தூர் சவேரியார்பாளையம் கூல்கரடு பகுதியை சேர்ந்த சந்தியாகு மகன் மரியலூயிஸ் (39) எனத் தெரியவந்தது. இவர் எம்ஏ, பிஎட்., படித்த பட்டதாரி ஆசிரியர். சம்பவம் நடந்த சில நாட்களில், அவரிடம் போலீசார் விசாரித்ததும், அப்போது அவர் அப்பாவி போல் இருந்து விடுவிக்கப்பட்டதும் தெரிந்தது. இதனால், மரியலூயிசை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடினர்.

இந்நிலையில் நேற்று, கொளத்தூர் பகுதியில் மரியலூயிசை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவரது கைரேகையை எடுத்து, அத்தாயம்மாள் வீட்டின் பீரோவில் பதிவான கைரேகையோடு ஒப்பிட்டு பார்த்தனர். இரண்டும் ஒன்றாக இருந்தது. உடனே மரியலூயிசிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர், அத்தாயம்மாளை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தோடு மற்றும் பீரோவில் இருந்த ரூ. 1.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ஈரோடு பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளியில், மரியலூயிஸ் பட்டதாரி ஆசிரியராக ரூ. 20 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்துள்ளார். அவரது மனைவி ஜூலி விமலா உத்தரியம் மற்றும் 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு மரியலூயிஸ் அடிமையாகியுள்ளார். இதனால், அந்த பள்ளியில் இருந்து அவரை நீக்கியுள்ளனர். பின்னர், அவர் ஈரோடு மேட்டுக்கடையில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் வேலை பார்த்துள்ளார். அங்கும் மது குடித்துவிட்டு செல்வதை வாடிக்கையாக்கியுள்ளார். இதன்காரணமாக, கொளத்தூர் சவேரியார்பாளையத்திற்கு வந்து தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது கட்டிட வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு மது குடித்து வந்துள்ளார்.

அந்த வகையில், ராமசாமியின் வீட்டிற்கு கட்டுமான வேலைக்கு சென்றுள்ளார். ஒருநாள் வேலை முடிந்த பின், தனக்கு ரூ. 6 ஆயிரம் கடன் தாருங்கள் என ராமசாமியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். அடுத்த நாளில் சீட்டு எடுத்து ரூ. 1.10 லட்சத்தை வீட்டிற்குள் கொண்டு சென்று, ராமசாமி வைத்துள்ளார். இதனை அறிந்த மரியலூயிஸ், அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு பின், ராமசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வெளியில் கட்டிலில் ஒருவர் படுத்திருப்பதை பார்த்து, தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். அது அத்தாயம்மாள் என அறிந்ததும், அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு அருகில் கிடந்த கத்தியை எடுத்து, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தலையணைக்கு அடியில் இருந்த சாவியை எடுத்து, வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். அங்கு பீரோவில் இருந்து ரூ. 1.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். பிறகு மூதாட்டி காதில் கிடந்த தங்கதோடை பறித்துக்கொண்டு, அங்கிருந்து நேரடியாக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ரூ. 50 ஆயிரம், தோடு ஆகியவற்றை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு, ரூ. 60 ஆயிரம் பணத்தோடு ஈரோட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு செல்போனை வாங்கிக் கொண்டு, ஊட்டியில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சில நாட்கள் தங்கி, பணத்தை ஜாலியாக செலவழித்துள்ளார். பின்னர், மறைத்து வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக, கொளத்தூருக்கு வந்த போது, மரியலூயிசை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது உண்மை எதையும் கூறாமல், அவர் தப்பியுள்ளார். மீண்டும் கர்நாடகா சென்ற அவர், மறுபடியும் மறைத்து வைத்த பணத்தை எடுக்க வந்த போது, தற்போது சிக்கிக்கொண்டேன் என வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மூதாட்டி கொலை, கொள்ளை வழக்கில் தீரன் அதிகாரம் ஒன்று சினிமா பாணியில், கைரேகையை வைத்து 9 மாதத்திற்கு பின், கொலையாளியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மூதாட்டியை கழுத்தறுத்து கொன்ற பட்டதாரி ஆசிரியர் அதிரடி கைது: 1000 பேரின் கைரேகைகளை ஒப்பிட்டு பிடித்த போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Mettur ,
× RELATED பெரம்பலூரில் பலத்த காற்றுடன் சாரல் மழை..!!