கரூரில் நுண் உரக்கிடங்கு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம்!!!

கரூர்: கரூரை அடுத்துள்ள குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் பாய், தலையணை மற்றும் வீட்டு உபயோக பொருட்களுடன் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. குளித்தலை நகராட்சிக்கு உட்பட்டு பெரியார் நகரில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள நுண் உரக்கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். குளித்தலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரக்கிடங்கில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள், முதியவர்களுக்கு  உடல் உபாதை போன்ற பல்வேறு நோய் தொற்று ஏற்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள உரக்கிடங்கினை வேறொரு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொறுமை இழந்த பொதுமக்கள் பாய், தலையணை, அடுப்பு, பாத்திரங்களோடு நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நகராட்சி ஆணையர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் களைந்து சென்றனர்.

Related Stories:

>