×

ஐ.சி.எப்.பில் மீண்டும் வந்தே பாரத் அதிவேக ரயில் பெட்டி தயாரிப்பு: 44 ரயில்களுக்கு 792 பெட்டிக்கு ஒப்புதல்

சென்னை: ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்.பில் மீண்டும் வந்தே பாரத் அதிவேக ரயில் பெட்டி தயாரிக்கப்படுகிறது. ஒரு ரயிலுக்கு 18 பெட்டிகள் வீதம் 44 ரயில்களுக்கான 792 பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, ஐ.சி.எப் நிறுவனத்தில் உலகத்தரம் வாய்ந்த நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவை இந்திய ரயில் போக்குவரத்துக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2018-19ம் ஆண்டில் ஐசிஎப்பில் ரயில்-18 திட்டம் வந்தே பாரத் அதிவேக ரயிலுக்கான நவீன தொழில்நுட்பத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் 18ல் இரண்டு உயர்வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். மொத்தம் 1,128 இருக்கைகள் கொண்டதாகவும், வைஃபை வசதியும், ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு தகவல் வழங்கும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன உணவு தயாரிக்கும் இடம், அதை விநியோகிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பெட்டியின் படிக்கட்டுகள், கதவுகள் தானியங்கி முறையில் அமைக்கப்பட்டு கடந்த 2018-19ல், ரயில் 18 திட்டத்தில், 160 கி.மீ, வேகத்தில் இயங்கக் கூடிய வந்தே பாரத் ரயிலுக்கு முதல்கட்டமாக இரண்டு ரயில்களுக்கான 36 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்துக்கு வழங்கப்பட்டன. இந்த இரண்டு ரயில்களும் டெல்லியில் இருந்து வாரணாசி மற்றும் ஜம்மு -காஷ்மீர், ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா நிலையத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் 2019-20ம் நிதி ஆண்டில் 4,200 பெட்டிகள் தயாரித்து, ஐ.சி.எப் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அதிவேக ரயிலுக்கான பெட்டிகளை, சென்னை ஐ.சி.எப்.பில் தொடர்ந்து தயாரிக்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ரயிலுக்கு 18 பெட்டிகள் வீதம் 44 ரயில்களுக்கான, 792 அதிவேக ரயில் பெட்டிகள், ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்பட உள்ளன. இப்பெட்டிகளுக்கான தளவாடங்களை, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : ICF ,Bharat , ICF, Vande Bharat High Speed Train, 44 trains, 792 box
× RELATED 250 ரயில்வே ஊழியர்கள் கைது