×

சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தை பரிசோதித்ததில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது; ஐகோர்ட்டில் கிளையில் தமிழக அரசு தகவல்

சென்னை: சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தை பரிசோதித்ததில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இம்ப்ரோ மருந்தில் வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கலாம் என கருதப்படுகிறது. சித்த மருந்தை பரிசோதிக்க மத்திய சித்தா, ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஐகோர்ட்டில் கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார்.

பின்னர் இந்தப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கண்டுபிடித்துள்ள இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்வதற்காக சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த சுழலில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மனுதாரர் தயாரித்துள்ள மருந்தில் கலக்கப்பட்டுள்ள சேர்க்கையின் அறிவியல் பின்னணியை ஆய்வு செய்தபோது அதில் கிருமிகளை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேல் நடவடிக்கைக்காக இம்ப்ரோ மருந்து மத்திய ஆயுர்வேதம் சித்த ஆராய்ச்சி கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

Tags : doctor , Siddha Medicine, Impro Medication, Immunity, Icort Branch, Government of Tamil Nadu
× RELATED பல்வேறு மாநிலங்களில் திருடி...