×

தேர்தல் முடிவுகளை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் 57 தொகுதியில் நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் உள்பட 7 மாநிலங்கள் மற்றும் சண்டீகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் ஏழாம், கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று ஓய்ந்த நிலையில், நாளை (ஜூன் 1) வாக்குப்பதிவு நடக்கிறது.மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களுக்கான 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளில் ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்தது.

முதல் ஆறு கட்ட வாக்குப்பதிவு முறையே 66.14 சதவீதம், 66.71, 65.68, 69.16, 62.2, 63.36 சதவீதமாக பதிவாகி உள்ளது. இந்நிலையில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 7ம் கட்டமாக நாளை (ஜூன் 1) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதாவது பஞ்சாப்பில் 13, உத்தர பிரதேசத்தில் 13, மேற்குவங்கத்தில் 9, பீகாரில் 8, ஒடிசாவில் 6, இமாச்சல் பிரதேசத்தில் 4, ஜார்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் சண்டீகர் யூனியன் பிரதேசம் உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் நேற்று மாலையுடன் மேற்கண்ட தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது.

இத்துடன் ஒடிசாவில் 41 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையுடன் கூடிய பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

அதேபோல் முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர் (ஹமிர்பூர்), நடிகை கங்கனா ரணாவத் (மண்டி), ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி (பாடலிபுத்திரம்), திரிணாமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜி (டைமண்ட் ஹார்பர்), காங்கிரஸ் மூத்த தலைவரான பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி (ஜலந்தர்) உள்ளிட்டோர் ஆவர். மொத்தம் 95 பெண்கள் உள்பட 904 வேட்பாளர்கள் 7ம் கட்ட தேர்தல் களத்தில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கிய பிரசாரம் 76 நாள்களுக்குப் பிறகு நேற்றுடன் முழுமையாக நிறைவடைந்தது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், தற்போது தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியதால் மக்கள் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில் அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிமில் நாளை மறுநாள் (ஜூன் 2) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தொடர்ந்து நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த தேர்தலின் வாக்குகள் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

The post தேர்தல் முடிவுகளை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் 57 தொகுதியில் நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Punjab ,Imachal Pradesh ,Chandigarh Union Territory ,Loka ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...