×

கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் முடிவு.

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் முடிவடைக்கிறது. மலையேறியவர்கள் கீழே இறங்கிய பிறகு, மலைப்பாதை முழுமையாக மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 12 முதல் இன்று வரை 2.25 லட்சம் பேர் மலையேற்றம். இக்கால கட்டத்தில் 9 பேர் மலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. வெள்ளியங்கிரியில் ஏழு மலைகள் உள்ளன. இங்குள்ள 7வது மலையில் சுயம்புலிங்கம் கோவில் உள்ளது. சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் மலையேற்றம் செய்கின்றனர். தமிழ்நாட்டிலேயே மிகவும் கடினமான மலைப்பாதையை கொண்டுள்ள மலை இது.

6 கி.மீ பயண தூரத்தில் கரடு முரடான பாறைகள் மற்றும் செங்குத்தான மலைப்பாதைகளை கடந்து வெள்ளியங்கிரி மலையின் உச்சியை அடையலாம். இந்த ஏழு மலைகளில் 7வது மலை தான் மிக கடினமான பயணத்தை கொண்டதாக இருக்கும். வெள்ளியங்கிரி மலையேற ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வனத்துறையினர் அனுமதி தருகின்றனர். கோடை காலத்திற்குப் பின்பு இந்த மலையில் பனி அதிகமாக இருக்கும். எனவே, அப்போது பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

7 மலைகளை கொண்ட வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் குழுவாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். முழு உடல் பரிசோதனை செய்து மலை ஏற வேண்டும். 6-வது மலையில் வனத்துறை சார்பில் தற்காலிக முகாம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. டிரோன் மூலமும் கண்காணிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்தனர். இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக சென்று சுவாமியை தரிசனம் செய்தனர் இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு இன்றுடன் (மே 31 ஆம் தேதி) அனுமதி முடிவடைகிறது.

இதன் பின்னர் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்றுடன் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் மலையேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

The post கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் முடிவு. appeared first on Dinakaran.

Tags : Viliyangiri ,Goa ,KOWAI ,KOWAI SILYANGRI ,
× RELATED கோவையில் இளம்பெண் பாதாள சாக்கடை...