×

கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் லேப் டெக்னீஷியன்கள் எடுக்க தடை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீஷியன்களுக்கு தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு மருத்துவ லேப் டெக்னீஷியன்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஏ.கோபிநாதன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா பரிசோதனைக்கு தொண்டை மற்றும் மூக்கிலிருந்து மாதிரிகளை எடுக்கும்போது காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கும் இ.என்.டி. மருத்துவர்களையும், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களையும் மட்டுமே  பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் விதிமுறைகளை வகுத்துள்ளது. மாதிரிகளை பரிசோதனை செய்து, முடிவுகளை வழங்குவது மட்டுமே லேப் டெக்னீஷியன் பணியாகும். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் லேப் டெக்னீஷியன் மூலமாகவே மாதிரிகளை எடுக்க வற்புறுத்தப்படுகிறது. பிளஸ் 2க்கு பிறகு டிப்ளமோ மட்டுமே முடித்துள்ள லேப் டெக்னீஷியன்கள், உடற்கூறுயியல் படித்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய பணிகளை செய்யக்கூடாது.

 கொரோனா சிகிச்சை வார்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு உடைகளுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அங்கும் லேப் டெக்னீஷியன்கள் சென்று பணிபுரியும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.  பாதுகாப்பு உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கவில்லை. எனவே, கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் எடுக்க வகுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். லேப் டெக்னீஷியன்களை   மாதிரி எடுக்க பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீஷியன்களுக்கு தகுதி உள்ளது. கடமையை செய்வதில் இருந்து அவர்கள் மறுக்கிறார்கள் என்றார். அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல்,  மத்திய அரசு விதிகளின்படி, கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்க லேப் டெக்னீஷியன்களை பயன்படுத்த கூடாது.  தகுதியில்லாத நபர்களை கொண்டு கொரோனா பரிசோதனை செய்யலாமா,  இஎன்டி மருத்துவ மேற்படிப்பு நிபுணர்கள் தான் தகுதியானவர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய,  மாநில அரசுகள் பதில்தர  உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags : lab technicians ,state governments ,corona test ,Central ,ban lab technicians ,Supreme Court , Central , state governments ,respond, Supreme Court order ,lab technicians
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...