×

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கு 5 பேரின் தூக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு

* கவுசல்யாவின் தந்தை விடுதலை
*மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: உடுமலைபேட்டை சங்கர்  கொலை வழக்கில், முக்கிய எதிரியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மேலும் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா, கல்லூரியில் தன்னுடன் படித்த மாற்று சமூகத்தை சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதிக்கு கவுசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி  கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது.இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்,  பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல்  ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீபன் தன்ராஜ்,  என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2017 டிசம்பர் 13 ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த திருப்பூர் நீதிமன்றம், குற்ற விசாரணை முறைச் சட்டப்படி, மரண தண்டனையை உறுதிப்படுத்துவதற்காக, வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.
அதேபோல, தண்டனையை எதிர்த்து தூக்கு தண்டனை பெற்றவர்களும், ஆயுள் மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்களும் மேல் முறையீடு செய்தனர். திருப்பூர் நீதிமன்றம் மூன்று பேரை விடுதலை செய்ததை எதிர்த்து காவல் துறை தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்த அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தனர்.மொத்தம் 327 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில், இந்த வழக்கில் கவுசல்யா, சங்கர் இருவரையும் பிரித்து வைக்க வேண்டும் என்று கவுசல்யாவின் பெற்றோர் திட்டமிட்டதாக கூறப்படுவதை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை. சம்பவம் நடப்பதற்கு முன்பு சின்னச்சாமி வங்கியில் பணத்தை எடுத்தது குடும்ப செலவுக்காகத்தான் என்று கூறப்பட்டுள்ளது. கவுசல்யாவின் சகோதரரும் இந்த கொலைக்கு அன்னலட்சுமிக்கு தொடர்புள்ளதாக சாட்சியத்தில் கூறவில்லை. சின்னச்சாமி, அன்னலட்சுமி, மற்றும் பாண்டித்துரை ஆகியோருக்கு சங்கர் கொலையில் உள்நோக்கம் இருந்ததாக கூறப்பட்டிருப்பதாயும் போதிய ஆதாரங்களுடன் போலீசார் நிரூபிக்கவில்லை.

எனவே, கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யப்படுகிறது. மேலும், திருப்பூர் நீதிமன்றத்தால் விடுதலை  செய்யப்பட்ட கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை மற்றும்  கூலிப்படையைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரின் விடுதலையை உறுதி செய்யப்படுகிறது. இந்த வழக்கில் ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல்  ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், இவர்கள் அனைவரும் 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், தண்டனைக் குறைப்பு ஏதும் வழங்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தன்ராஜ் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன் ஆகிய இருவரின் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். மேலும் அன்னலட்சுமி, பாண்டிதுரைக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள், தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Sumangara ,Udumalaipettai Shankar , Udumalaipettai, Shankar murder case, life sentence
× RELATED சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள்...