×

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை முதல் வீடு தேடி வந்து ரூ.1000 வழங்க ஏற்பாடு: தினசரி 200 கார்டுகளுக்கு தரப்படும்

சென்னை: முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் வீடுகளுக்கே வந்து ₹1000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 200 கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 19ம் தேதி அதிகாலை முதல் வருகிற 30ம் தேதி இரவு வரை 12 நாட்களுக்கு, பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட மாங்காடு மற்றும் குன்றத்தூர் பேரூராட்சி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, மவுலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ₹1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, நாளை (22ம் தேதி) முதல் 26ம் தேதி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ₹1000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒவ்வொரு ரேஷன் கடைகளில் 1000 முதல் 1400 வரை ரேஷன் கார்டுகள் உள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 200 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ₹1000 வழங்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் இந்த பணி நடைபெறும். விடுபட்டவர்கள் 29 மற்றும் 30ம் தேதி ரேஷன் கடைகளில் பெறலாம். அதிக கூட்டம் கூடினால், பணம் வழங்குவது நிறுத்தப்படும். ரேஷன் கடை ஊழியர்கள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு உடைகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்” என்றார். அதேநேரம், வீடுகளுக்கே சென்று பணம் வழங்கினால், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் ரேஷன் கடைகளில் தகுந்த பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு பணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : house ,districts ,Chennai , Arrangements , search , first house , tomorrow's 4 districts ,Chennai,offer Rs.1000
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்