×

நீர்வரத்து கால்வாய் தூர்வாராததால்வறண்டு கிடக்கும் காக்களூர் ஏரி

* அதிகாரிகள் அலட்சியம்
* பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஏரி நீர்வரத்து கால்வாய் மற்றும் உபரிநீர் செல்லும் கால்வாய்களை தூர்வாராததால் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ், 1,945 ஏரிகள் உள்ளன. 1,895 குளங்களும் உள்ளன. மேலும், 25,658 கிணறுகள் உள்ளன. பொதுப்பணித்துறை ஏரி நீர்ப்பாசனத்தை நம்பி 8,455 ஹெக்டேர் நிலங்களும், ஒன்றிய ஏரி நீர்ப்பாசனத்தை நம்பி 4,676 ஹெக்டேர் நிலங்களும் உள்ளன. இந்த ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் முள்செடிகள் மற்றும் பாலித்தீன் கவர்கள் கொட்டி கிடப்பதால் மழைநீர் ஏரிக்கு வர வழியில்லாத நிலை உள்ளது. இம்மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கோடை மழை பதிவாகியும், தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.

மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நீர்வரத்து கால்வாய்களை சீர் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அதற்கு அதிகாரிகளும் சரி செய்து விடுவோம், நிதி கிடைக்கவில்லை, வந்ததும் தூர்வாரப்படும் என பதில் கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
விளைவு மழையின்போது அதன் நீரானது ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்வதில்லை. ஆங்காங்கே தேங்கி வீணாகிறது. மழைக் காலங்களில் நீரை சேமிக்க தவறுவதால் நிலத்தடிநீர் குறைந்து கடும் வறட்சியை சந்திக்கும் நிலை தொடர்கிறது. இந்த நிலத்தடிநீரை நம்பி, ஒரு லட்சத்து 72,499 ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் அலட்சியத்தால் திருவள்ளூர் அருகே காக்களூர் ஏரி, கூவம் ஏரி, சேலை ஏரி, ஏகாட்டூர் ஏரி, வெண்மணம்புதூர் ஏரி உட்பட பல ஏரிகளுக்கு நீர்வரத்து வர வாய்ப்பு இல்லாமல் உள்ளது. மேலும், ஏரியில் நீர் நிரம்பினால் உபரிநீர் செல்லும் கால்வாய்களும் தூர்வாரப்படாமல் புதர்மண்டி உள்ளது. இதனால், விவசாயம் இல்லாமை, மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் உருவாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஏரி மதகுகளில் உள்ள ஷட்டர்கள் சேதமடைந்து மாத கணக்காகி விட்டன. இதை திறக்கவோ, அடைக்கவோ முடியாத நிலை இருப்பதால் சிறிதளவு தேங்கும் தண்ணீரும் வீணாகும் நிலை உள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்.



Tags : Lake Kakkalur , Water Canal, Kgloor Lake
× RELATED சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள்...