×

நிதிச்சுமை குறைய... நன்மதிப்பு பெருக... ஓய்வு பெற்றவர்களுக்கு பதவி தராதீர்கள்: நிதித்துறை ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: மாநில அரசின் நிதித்துறையில்  ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு தரப்பட்ட பணியிடங்களை ரத்து செய்வதால்  அரசின் நிதிச்சுமை குறைவதுடன், நிதித்துறையின் மீதான நன்மதிப்பு பெருகும் என்று தலைமைச் செயலக ஊழியர்கள், அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நிதிச்சுமையால் தள்ளாடி வரும் தமிழக அரசு ஊரடங்குக்கு பிறகு மேலும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மத்திய அரசிடம் நிதி ஒதுக்க கேட்டும் பலனில்லை. ஜிஎஸ்டி வருவாயில் பங்கு கேட்டும் மத்திய அரசு கண்டுக் கொள்ளவில்லை. அதனால் மாநில அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு அதிகாரிகளின் பயணங்கள், விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

அலுவலகங்களுக்கு தேவையான மரச்சாமான்கள், கணிப்பொறிகள் வாங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக புதிய பணியிடங்களை நிரப்பவும் தடை போடப்பட்டுள்ளது. இது குறித்து தினகரனில்  செய்தி வெளியானது. மே 26ம் தேதி வெளியான அந்த செய்தியில், ‘புதிய பணியிடங்களுக்கு தடை விதித்தது போல், நிதிச்சுமையை குறைக்க அமைச்சர்களின் சிறப்பு உதவியாளர் பணியிடங்களை ஒழிக்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தி உள்ளதை ரத்து செய்ய வேண்டும்’ என்று தலைமைச்செயலக ஊழியர்கள், அதிகாரிகளின் கோரிக்கையும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் தலைமைச் செயலக நிதித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து அந்த துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணனுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நிதிச்சுமையை குறைக்க  மே 21ம் தேதி வெளியிடப்பட்ட புதிய ஆணையின் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைளை வரவேற்கிறோம். அது தொடர்பாக தினகரன் நாளிதழிலும் செய்தி வெளியாகி இருந்ததையும் உள்ள மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அதில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்தி இருப்பதால் ஏற்படும் நிதிச்சுமை குறித்து இடம் பெற்றிருந்தது.

ஆனால் நிதிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள நிதித்துறையிலேயே அதுபோன்ற ஓய்வு பெற்ற அலுவலர்கள்  பல ஆண்டுகளாக பணியில் தொடர்கின்றனர். எனவே அந்த பணியிடங்களை ரத்து செய்து  சிக்கன நடவடிக்கையை நிதித்துறையில் இருந்து முதலில் தொடங்க வேண்டும். இந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளால் பல கோடி ரூபாய் ஆண்டுதோறும் அரசு செலவிட வேண்டி உள்ளது. ஒவ்வொரு அலுவலரும் மாதம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வரை ஊதியம் பெற்று வருகின்றனர். இது தவிர ஆய்வு, பயணப்படி என பல ஆயிரங்களை மாதாமாதம் சுருட்டுகின்றனர்.

அதுமட்டுமல்ல இந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் தங்கள் லாபத்திற்காக  அரசின் பல்வேறு நடவடிக்கைகளை சீர்குலைக்கின்றனர். மேலும் பணியில் இருக்கும் அதிகாரிகள், ஊழியர்களுடன் இணைந்தோ, இணக்கமாகவே செயல்படுவதில்லை. அதனால் பணிகள் முடங்குகின்றன. பணியில் இருக்கும் ஊழியர்களும், அலுவலர்களும் அலைக்கழிக்கப் படுகின்றனர். மேலும் இவர்கள் பணி அனுபவத்தை காரணம் காட்டி ஐஏஎஸ் அதிகாரிகளை தவறாக வழி நடத்துகின்றனர். கூடவே ஓய்வு பெற்ற அலுவலர்கள் எல்லோரும் ஓன்றாக சேர்ந்து சிண்டிகேட்(குழு) அமைத்து செயல்படுகின்றனர்.

இந்த குழுவை ஓய்வு பெற்ற முன்னாள் இணை செயலாளர் வேணுகோபால், வெங்கடேசன், துணை செயலாளர் நாதன் ஆகியோர் வழி நடத்துகின்றனர். இந்தக் குழு நிதித்துறையின் ஒவ்வொரு முடிவிலும் தலையிடுகின்றனர். ஓய்வு பெற்ற அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளால் நிதித்துறையின் நன்மதிப்பு பெயர் கெட்டுப்போயுள்ளது. இந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள்தான் ஐஏஎஸ் அலுவலர் சித்திக்  இடமாற்றத்திற்கும் காரணம். எனவே ஓய்வு பெற்ற அதிகாரிகள் மீண்டும் பணி அமர்த்தப்பட்டு உள்ளதால் அரசின் நிதி வீணாகிறது. துறையின் பெயர் கெட்டுப்போய் விட்டது. அந்த பணியிடங்களால் அரசுக்கு எந்த பலனும் இல்லை.

எனவே ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தியுள்ளதை ரத்து செய்ய வேண்டும். அதன்மூலம் நிதிச்சுமை குறைப்பை  நிதித்துறையில் இருந்து தொடங்க வேண்டும். நிதித்துறையின் நன்மதிப்பை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் நிதித்துறையின் அலுவலர்கள், ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த மனுவின் நகல்களை ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், நிதித் துறையை கையில் வைத்திருக்கும் துணை முதல்வர், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் , உயர் நீதிமன்ற பதிவாளர் என பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். கூடவே நிதித்துறையில் தொடர்ந்து பணியில் இருக்கும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பட்டியலையும் இணைத்துள்ளனர்.

Tags : retirees , Decrease financial , Increase , benefits , retire, retirees, financial staff
× RELATED சென்னை மாநகர காவல் துறையில்...