×

40 கி.மீ. தொலைவுக்கு பயங்கர சத்தம் புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதாக மக்கள் பீதி: விபத்து எதுவும் நடக்கவில்லை என அதிகாரிகள் விளக்கம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா செங்கானம் ஊராட்சியில் மேலவசந்தனூர் ஏரி உள்ளது. இந்த வழியாக நேற்று காலை 10 மணியளவில் மேற்கு பகுதியான மதுரையில் இருந்து கிழக்கு பகுதியான புதுக்கோட்டை  நோக்கி விமானமும், வடக்கு பகுதியான தஞ்சையில் இருந்து தெற்கு பகுதியான ராமநாதபுரம் நோக்கி ராணுவ ஹெலிகாப்டரும் சென்றுள்ளது. விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் வந்தபோது அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, மணமேல்குடி தாலுகாக்களில் உள்ள சுமார் 40 கி.மீ. சுற்றளவுக்கு கேட்டுள்ளது. சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் மேலவசந்தனூர் ஏரியில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் பற்றி எரியத் தொடங்கின.

அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, தீப்பற்றியதால் மரங்கள் எரிவதாக நினைத்தனர். அதே நேரம் இப்பகுதியை சேர்ந்த சிலர், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாகதகவல் பரப்பிவிட்டனர். இந்த தகவல் வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்களில் வெளிநாட்டு விபத்துகளின்போது எடுக்கப்பட்ட படங்களுடன் வெளியானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் ஏரியில் இருந்த மரங்களில் பற்றிய தீயை அணைத்தனர். தீயை அணைத்து பார்த்தபோது, அங்கு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கான எந்தவித அடையாளமோ, உதிரி பாகங்களோ  கிடைக்கவில்லை. இதனால் ஹெலிகாப்டர் எதுவும் விபத்தில் சிக்கவில்லை எனஅதிகாரிகள் தெரிவித் தனர்.

வீடுகள், கட்டிடங்கள் ஆடின
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, நம்புதாளை, திருவாடானை, தொண்டி, மங்கலக்குடி, திருப்பாலைக்குடி உள்ளிட்ட தாலுகாக்களிலும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதிகளிலும் பயங்கர சத்தம் கேட்டது. சத்தத்தின்போது வீடு, கட்டிடங்கள் லேசாக அதிர்வடைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Tags : Pudukkottai Pudukkottai , Terrible noise, Pudukkottai, helicopter, people panic, authorities
× RELATED புதுக்கோட்டையில் ராணுவ ஹெலிகாப்டர்...