×
Saravana Stores

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் மிதமான மழையும், தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், ஆம்பூரில் 4 செ.மீ மழையும், வால்பாறை மற்றும் போலூரில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், பெருங்கலூர், நடுவட்டம், வந்தவாசி, ஓசூர், ஆலங்காயம், மேலளத்தூர், ஆரணி, சின்னகலார் மற்றும் செய்யாறு பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும், வால்பாறை, பூதபாண்டி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வாணியம்பாடி, அரிமளம், திருப்பத்தூர், ஊத்தங்கரை, சூளகிரி, தாள்ளி, காவேரிப்பாக்கம், விரிஞ்சிபுரம், வேலூர் மற்றும் செஞ்சி பகுதிகளில் தலா செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வட ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரையிலிருந்து மத்திய மேற்கு மற்றும் அருகிலுள்ள வடமேற்கு வங்காள விரிகுடாவில் நேற்றைய தினம் உருவான குறைந்த அழுத்தப் தாழ்வு பகுதி, தற்போது வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனுடன் இணைந்த கரையோர ஒடிசா அருகில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக, இன்று ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைகளில் காற்றின் வேகம் 40-50 கிமீ வேகத்தை எட்டும். மத்திய வங்காள விரிகுடாவில் 40-50 கி.மீ வேகத்தில் வேகமான காற்று வீசக்கூடும். ஜூன் 12 முதல் 16ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரேபிய கடலில் சூறாவளி காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு அரேபிய கடல், கர்நாடகா, தெற்கு மகாராஷ்டிரா மற்றும் கோவா கடற்கரைகளிலும் வேகமான காற்று 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். வடக்கு மகாராஷ்டிரா கடற்கரைகளில் 40-50 கிமீ வேகத்தை எட்டும் வேகமான காற்று வீசக்கூடும். கடல் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் வரை குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒருசில நேரங்களில் எழும்பக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுவதாக சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Tags : districts ,Theni ,Coimbatore ,Nilgiris ,Chennai Meteorological Department Nilgiris ,Chennai Meteorological Department , Tamil Nadu, Puducherry, Rain, Chennai Meteorological Center
× RELATED தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில்...