×

கலர்புல் கல்யாண கொண்டாட்டங்கள் ‘கட்’களையிழந்த மண்டபங்களால் வாழ்விழந்த தொழிலாளர்கள்

* மேளதாளம், கேட்டரிங் என பாகுபாடு இல்லாமல் பதம் பார்க்கும் கொரோனா

‘கல்யாணம் பண்ணிப்பார்... வீட்டை கட்டிப்பார்’ - என்பார்கள். இரண்டுமே கஷ்டமான விஷயம். மனித வாழ்வின் அவசியத்தேவை ஒரு சொந்த வீடு. மனைவி, பிள்ளைகளுடன் அமைதியான வாழ்க்கை. அந்த வகையில், மனித வாழ்க்கையின் 2வது இன்னிங்ஸ் என்றே திருமணத்தை குறிப்பிடலாம். மார்ச் 25ல் துவங்கி, ஊரடங்கு தொடரும் இந்த சூழலில், கடந்த 3 மாதங்களில் மட்டும், தமிழகம் முழுவதும் சுமார் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் நின்று போய் உள்ளன. ஒட்டுமொத்த இந்தியாவையும் கணக்கிட்டால் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் வரை நின்று போனதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 22ம் தேதியே நல்ல சுபமுகூர்த்த தினம்தான். அன்றைய தினம் பலர் முன்கூட்டியே மண்டபங்களை புக் செய்து, திருமணங்களை நடத்த முடிவு செய்திருந்தனர். கடைசி நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அன்று நடக்கவிருந்த பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நிறுத்தப்பட்டன. சில திருமணங்கள் எளிமையாக வீட்டிற்குள்ளேயே நடந்து முடிந்தன. மார்ச் 22 சுய ஊரடங்கையும் சேர்த்து ஜூன் 15ம் தேதி வரை கணக்கில் 15க்கும் மேற்பட்ட சுபமுகூர்த்த தினங்கள் இருக்கின்றன. சிலர் ராசி நட்சத்திரம் அடிப்படையிலும், விடுமுறை என்பதாலும் ஞாயிற்றுக்கிழமையையும் தேர்வு செய்வதால், இந்த சுப நாட்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டுகிறது. இவ்வகையில், கடந்த 3 முக்கிய சுபமுகூர்த்த மாதங்களில் ஊரடங்கால் தமிழகத்தில் மட்டுமே 1.50 லட்சம் திருமணங்களைத் தள்ளி வைத்திருக்கின்றனர்.

இது, திருமணம் சார்ந்த தொழில்களான மண்டப உரிமையாளர்கள், சமையல்காரர்கள், திருமண அழைப்பிதழ் அச்சடிப்பவர்கள்,  போட்டோ- வீடியோகிராபர்கள், மணப்பெண் அலங்கார கலைஞர்கள், திருமண தகவல் மையங்கள், அலங்கார பந்தல் அமைப்போர், மேளதாளம் வாசிப்போர், ஒலி-  ஒளி அமைப்பாளர்கள் என திருமண நிறுத்தங்களால் தொழில் பாதிப்பு நீள்கிறது. திருமணத்திற்கு தேவையான நகைகள், துணிகள் வாங்கப்படும், நகைக்கடை, ஜவுளிக்கடைக்காரர்களுடன், வாடகை வாகன ஓட்டிகளின் வணிகமும் இக்காலங்களில் நசிந்திருக்கிறது. மாலை, பூக்கள் விற்பனையோடு, காய்கறிகள், பழங்கள் விற்போர், மளிகை வணிகமும் கூட இதனால் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறது. கட்டில், மெத்தையுடன், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பாத்திரங்கள் துவங்கி வீட்டு உபயோக சீர் பொருட்கள் வாங்குதலும் தடைபட்டுள்ளது. திருமணம் அது சார்ந்த வணிகத்தில் இருக்கும் பல லட்சம் பேரை வாழ்வாதாரம் இழக்க வைத்து தவிப்பிற்குள் தள்ளிவிட்டிருக்கிறது. பல நூறு கோடி பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த ஊரடங்கு.


பெற்றோரே இல்லாமல் பெண்ணுக்கு திருமணம்

ஊரடங்கால் பெற்றோரே இல்லாமல் பெண்ணின் திருமணம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துரையை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அர்ச்சனா மும்பையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மும்பையில் உள்ள உறவினர் மகனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வெளிமாநிலங்களுக்கு செல்ல விதித்த தடை காரணமாக மும்பையில் நடந்த மகள் திருமணத்திற்கு கண்ணன் தம்பதி செல்ல முடியவில்லை. இதனால் வீடியோமூலம் வாழ்த்திய நெகிழ்ச்சியான தருணமும் ஊரடங்கால் நிகழ்ந்துள்ளது.

செலவு, அலைச்சல் மிச்சம் சிம்பிளாவே முடிச்சுட்டேன்...

பல லட்சம்  செலவழித்து, ஆயிரக்கணக்கானோரை அழைத்து, விருந்தளித்து செய்யும்  நிகழ்வு திருமணம்.  ஆனால் கொரோனா காலத்தில் இதெல்லாம் செய்ய முடியாததால் மண்டப வாடகை  துவங்கி  பல்வேறு செலவுகளும் மிச்சம் என்றும் சிலர் கருதுகின்றனர். இதுதொடர்பான ஒரு முகநூல் பதிவில், மண்டப செலவு, சாப்பாடு, ேபாட்டோ, வீடியோ என செலவு பல லட்சம் வரை மூச்சை முட்ட வைக்கும். அதனால பேசியபடியே மகள் கல்யாணத்தை, ஊரடங்கு காலத்திலேயே முக்கிய சொந்தங்களை அழைத்து முடித்து விட்டோம். அதுக்கு ஆகிற செலவை மகளின் வங்கிக்கணக்குல போட்டு விட்டேன் என ஒருவர் பதிவிட்டுள்ளார். என்னமா யோசிக்குறாங்க...!

1.50 லட்சம் திருமணங்கள் நிறுத்தம்
பத்திரப் பதிவு அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் 574 பத்திரப்பதிவு  அலுவலகங்கள் உள்ளன. ஒரு பதிவு அலுவலகத்தில் ஒரு முகூர்த்தத்திற்கு, சுமார் 25 திருமண பதிவுகள் நடக்கும். இதன்படி மொத்த முகூர்த்த தினங்களை வைத்து கணக்கிடும்போது, சுமார் 1.50 லட்சத்துக்கும் மேலான திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவையனைத்தும் நின்று போனது. இதனால், பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வர வேண்டிய பல கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் பாதித்துள்ளது. இதுதவிர, கோயில்களில் திருமணம் நடைபெறும். அங்கேயும் திருமணம் பதிவு செய்யப்படும். தற்போது பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படாததால், கோயில்களுக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான வருமானமும் நின்றுபோயிருக்கிறது’’ என்றார்.

கொடுத்த அட்வான்சை எப்ப திருப்பி தருவீங்க சார்?
ஊரடங்கால்  திருமண மண்டபங்கள் மூடப்பட்டதில், திருமணத்திற்கென  ஏற்கனவே மண்டப உரிமையாளர்களிடம், கொடுத்த அட்வான்சை திரும்ப பெற முடியாமலும்  பல திருமண வீட்டார் தவித்து வருகின்றனர். ‘திருமண விசேஷங்கள் புக்கானதும்  அட்வான்சை தந்து விடுகிறோம். இப்போது தர முடியாது’ என மண்டப உரிமையாளர்கள்  கறாராக பேசி வருகின்றனராம்.

4 லட்சம் பேர் பாதிப்பு
போட்டோ மற்றும் வீடியோகிராபர் நவ்சாத்: தமிழகத்தில் மட்டும் குறைந்தது 4 லட்சம் பேர் இந்த வீடியோ, போட்டோ தொழிலில் இருக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் மட்டுமே 10 ஆயிரம் பேருக்கு இதுதான் ஆதாரம். திருமணங்களில் தளர்வுகள் அறிவித்தபோதும், 50 பேருக்குள் ஒரு திருமணத்தை நடத்தி முடித்திட தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கால் திருமண நிகழ்ச்சிகளை பதிவிடுகிற வீடியோ, போட்டோகிராபர்களின் பாடு மோசமாகி விட்டது. நவம்பருக்கு பிறகே திருமணங்களை நடத்த பலரும் முடிவெடுத்திருக்கின்றனர். நடத்தப்படும் ஒரு சில திருமணங்களிலும் தங்களது உயர்தர செல்போனிலேயே நிகழ்வுகளை பதிவு செய்து, எடிட் ஆப் மூலம் சரிப்படுத்தி சி.டி.களாக்கிக் கொள்வதும் இக்காலத்தில் நடந்து வருகிறது. முகூர்த்த நாட்கள் தவிர்த்த மற்ற காலங்களில் போட்டோ ஸ்டூடியோ கடைகள் கை கொடுக்கும். ஊரடங்கால் இவற்றையும் மூடியதில் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

6 மாதம் வருவாய் காலி
மதுரை சமையல் கலைஞர் கணேசன்:  மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மட்டும் 15 ஆயிரம் சமையல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் லட்சக்கணக்கானோர் உள்ளனர். ஒரு திருமணத்திற்கு அதிகபட்சம் 3 நாட்கள் வரை, தொடர்ந்து வேலை செய்வோம். கடந்த 3 மாதத்திற்கும் மேலாக ஏராளமான திருமணங்கள் நடக்கவில்லை. 3 மாதங்களாக வருவாயின்றி சமையல்காரர்கள், உதவியாளர்கள், சப்ளையர்கள் பெரும் பாதிப்பில் இருக்கிறோம். தொழிலாளர் நல வாரியமும் எங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை.

மண்டப அலங்கார தொழிலும் பாதிப்பு
திருமண மகால் உள் அலங்கார அமைப்பாளர் பிரகாஷ்: திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் மகால், வீடுகளில் அலங்காரப்பணிகளில் மட்டும் மாநிலம் முழுக்க ஒரு லட்சம் பேர் வரை இருக்கின்றனர். மதுரையில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இதுதான் தொழில். மேடை, பூ அலங்காரம், ஷாமியானா உள்ளிட்ட பந்தல் அமைத்தல், பலூன், ஓவிய டெகரேசன்கள், சீரியல் செட் அமைப்பது என பல்வேறு நிலைகளில் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.20 லட்சம் வரையிலும் அமைத்து வருகிறோம். கொரோனா திருமண தடையால், எங்கள் தொழில் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகி விட்டது. நடக்கும் ஒரு சில திருமணங்களிலும் இந்த அலங்காரத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் வீடுகளிலேயே செய்து முடிப்பதால், மிகுந்த வருவாய் இழப்பில் இருக்கிறோம்.

மேக்கப் தொழிலும் பேக்கப்
அழகுக்கலை  நிபுணர் திவ்யா: ஊரடங்குக்கு முன்பு ஒரு கல்யாணம் என்றால்,  நிச்சயதார்த்தம், கல்யாணம், வரவேற்பு என ஒரே நிகழ்ச்சியில் 4, 5 ஆர்டர்கள்  வரை கிடைக்கும். வளர்பிறை முகூர்த்தங்களில் ஒரே நாளில் 4, 5 திருமணங்கள் வரை  கிடைக்கும். தற்போது திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதியால்,  போதிய ஆர்டர்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் செலவை குறைப்பதற்காக  சிம்பிளாகவே மேக்கப் செய்யுமாறு சொல்கின்றனர். இதனால் என்னைப்போல அழகுக்கலை  தொழிலை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் எங்களில் பலர் ஆன்லைனில் மேக்கப் செய்யும் முறைகளை பற்றி கிளாஸ் எடுக்கிறோம்.



Tags : wedding celebrations ,halls , Colourbull wedding, waste halls, workers, corona, casualties
× RELATED தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும்...