×

வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?.. மருத்துவர்கள் தரும் புதிய தகவல்

வெயில் காலத்தில் பகல் நேரத்தில் வெயிலில் பணி மேற்கொள்ளும் போது அதிக வியர்வை வெளியேறும். அவ்வாறு வெளியேறும் போது உப்புச் சத்துப் பற்றாக்குறையும் நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர, வெயிலில் நேரடியாகச் செல்பவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். வெப்பம் அதிகரிக்கும்போது நம் உடல், தானாக வியர்வையைச் சுரந்து, நம் உடலில் சேரும் வெப்பத்தை வியர்வையாக வெளியேற்றி விடும். ஆனால் அதுவும் ஓரளவுக்குத் தான் செயல்படும்.  அதிகமான வெப்பம் வியர்வையாக வெளியேறவில்லை எனில், அது உடலில் தங்கி வெப்ப அழுத்தத்தை உண்டாக்கும்.

இதனால் முகப்பரு, வறண்ட சருமம், வெப்ப சொறி, படை நோய் போன்ற பல்வேறு வகையான சரும பிரச்சனை அல்லது தோல் வியாதி வரக்கூடும். கோடை காலத்தில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என காவேரி மருத்துவமனை தோல் மருத்துவர் ஆஷிக் முகமது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கோடை காலத்தில் அதிகமாக வியர்வை ஏற்படும். இது தோலில் இருக்கும் சிறிய துளை வழியாகத்தான் வெளியேறும்.் அதிக வியர்வை வரும் போது அந்த சிறிய துளை வழியாக வெளியேறமுடியாமல் தோலின் அடியில் தங்குவதால் தடிப்புகள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது. குறிப்பாக அக்குள், தொடை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்று வெப்பத்தால் ஏற்படும் சரும பிரச்சனை தடுக்க மக்கள் இரண்டு முறை குளிக்க வேண்டும், வெளியில் செல்வதற்கு முன் சரியான அளவு சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும்.

ஒரு முறை சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே இருக்கும். அதிகமாக வெளியில் சுத்தும் நபர்கள் 3 அல்லது 4 முறையாவது சன்ஸ்கிரீம் பயன்படுத்த வேண்டும். aமேலும் வெயிலில் வியாபாரம் மேற்கொள்ளும் நபர்கள் முழு கை சட்டை மற்றும் தொப்பி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் வழிகள்
இறுக்கமான உடைகளை அணிய கூடாது. தாகம் இல்லாவிட்டாலும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளுடன் தர்பூசணி, முலாம்பழம், மாம்பழம், எலுமிச்சை, புதினா, தேங்காய், வெண்ணெய் மற்றும் இலை கீரைகள் போன்ற பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது குடை, தொப்பி அணிய வேண்டும். சரும பாதுகாப்புக்கு சன்ஸ்க்ரீன் அவசியம் பயன்படுத்த வேண்டும். வெப்பம் தொடர்பான சரும பிரச்சனைகளை உடனடியாக மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

எந்தவகையான சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்?
சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதா ஒளி நேரடியாக உடல் அதாவது சருமத்தின் மீது விழும் இதனால் பல்வேறு வகையாக சரும பிரச்னை வரும் அதனால் வெளியில் செல்லும் முன் முகம், கை, கால்களில் சன்ஸ்க்ரீன் பயன்படுத்திய பிறகு செல்ல வேண்டும். குறிப்பாக 15 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்பிஎஃப் உடன் யுவிஏ./யுவிபி சன்ஸ்க்ரீன், 30 அதற்கு மேற்பட்ட எஸ்பிஎஃப் உடனான நீர் எதிர்ப்பு சன்ஸ்க்ரீனை பயன்படுத்தலாம். மேலும் காமெடோஜெனிக் அல்லாத (non-comedogenic) சன்ஸ்க்ரீன் அல்லது ஜிங்க் ஆக்சைடு (zinc oxide) உள்ள சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எண்ணெய் சருமம் உடையவர்கள் என்ன செய்ய வேண்டும்?
எண்ணெய் சருமம் அதிக தூசி, முதலில், பாக்டீரியா மற்றும் தோலில் உள்ள தொற்றுகளை ஈர்க்கின்றன. எனவே, முகத்தை சரியாக சுத்தம் செய்து, பின்னர் உங்கள் சருமத்திற்கு ஏற்ற கிரீம் பயன்படுத்த வேண்டும். சரும வறட்சி, நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவும்.

The post வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?.. மருத்துவர்கள் தரும் புதிய தகவல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...