×

தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைப்பு

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி கல்லூரி இணைந்து 2 நாட்கள் நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பிரமாண்ட கல்வி கண்காட்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் திரண்டு வந்திருந்தனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்க தினகரன் நாளிதழ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்களுக்காக கல்வி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கல்வி என்பது மாணவர்கள் மதிப்பெண் எடுப்பது என்கிற அளவிலேயே இருக்கிறது. எனவே பிளஸ் 2 படித்து முடித்து தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய படிப்பை தேர்வு செய்வது என்பது மாணவர்களிடையே மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. அந்த சவாலை சந்தித்து தங்கள் வீட்டு செல்லங்களை எந்த பாடப்பிரிவில் சேர்க்கலாம் என்கிற கவலை தீர்க்கும் அருமருந்தாக தினகரன் நாளிதழ் சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த மாபெரும் கல்விக் கண்காட்சி மாணவர்களுக்கு உதவுகிறது.

ஆண்டுதோறும் நடத்தக்கூடிய தினகரன் கல்விக் கண்காட்சியை, இந்த ஆண்டும் தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்து இருக்கின்றன. அதன்படி, தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்தும் பிரமாண்ட கல்வி கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த கண்காட்சியின் அரங்கத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர் ரமேஷ் முன்னிலையில், உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை விஐடி சார்பு துணை வேந்தர் டாக்டர். டி. தியாகராஜன், ரெமோ கல்லூரி இயக்குநர் ரித்திக் பாலாஜி ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் கண்காட்சியை பார்வையிட குவிந்தனர். குறிப்பாக, பொறியியல், மருத்துவம், விமான தொழில்நுட்பம், அனிமேஷன், அயல்நாட்டு கல்வி, கலை அறிவியல், நர்சிங், ஊடகம், ஓட்டல் மேலாண்மை, கட்டிட கலை, புகைப்பட கல்வி, வர்த்தக கல்வி, கடல்சார் கல்வி, அழகு கலை, தீ மற்றும் பாதுகாப்பு, காலணி வடிவமைப்பு, பிளாஸ்டிக், பெட்ரோலியம், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் மாணவர்களின் சந்தேகங்களையும் அவர்களுக்கு தெளிவுபடுத்தினர். மேல் படிப்பை எவ்வாறு தேர்வு செய்வது குறித்தும் பெற்றோர்களும், மாணவர்களும் தங்கள் சந்தேகங்களை கேட்டு தீர்வுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அந்தந்த கல்வி நிறுவனங்கள் சார்பில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்தனர். இதனால் மாணவர்கள் தங்கள் மனதில் எழுந்துள்ள அனைத்து சந்தேகங்களையும் கேட்டறிந்தனர். மேலும், கண்காட்சியில் தொழில் நெறி வழிகாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாது, நீட் தேர்வு தொடர்பான விழிப்புணர்வு, போட்டோ கிராபி, கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் உடன் மட்டுமின்றி, தங்களின் நண்பர்களுடன் கண்காட்சிக்கு வந்திருந்ததால் கண்காட்சியில் இருந்த அரங்குகள் முழுவதும் கூட்டம் அலைமோதியது. படிப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பது மட்டுமின்றி, மாணவர்கள் வங்கியில் கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேபோல், எந்தெந்த படிப்புகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் எந்த வகையான வேலை வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும் கண்காட்சியில் பேராசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்து கூறினர். இதுதவிர கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வழிமுறைகள் என்ன? எவ்வளவு கட்டணம் வரும்? கல்வி உதவித் தொகையை பெறுவது எப்படி? கட்டண சலுகைகள் எவ்வளவு கிடைக்கும்? என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொண்டனர். இதனால் தங்கள் பிள்ளைகளை எந்த படிப்பில் சேர்க்கலாம் என்பது குறித்து முடிவை எடுக்க இந்த கல்வி கண்காட்சி பெரிதும் உதவியாக இருந்ததாக அங்கு வந்திருந்த மாணவர்களும், பெற்றோர்களும் பெருமிதத்துடன் கூறினர்.

குளு குளு வசதி

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்து வரும் பிரமாண்ட தினகரன் கல்வி கண்காட்சியானது ஹால் 3ஏவில் நடைபெற்று வருகிறது. சென்னையில் தற்போது 100 டிகிரியை தாண்டி சென்னையில் வெயில் மண்டையை பிளந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் பொறுமையாக அமர்ந்து தங்கள் எதிர்காலத்தை தேர்வு செய்யக்கூடிய நிகழ்வு என்பதால் கல்வி கண்காட்சி நடைபெறும் அரங்கம் முழுவதும் குளு குளு ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. பிரமாண்ட ஹால் என்றாலும் அனைத்திலும் முழு அளவில் ஜில்லென்ற ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெயில் கொடுமை இல்லாமல் நிம்மதியாக தங்கள் சந்தேகங்களை பேராசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

The post தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Education Exhibition for Plus 2 Students ,Dinakaran ,Chennai ,VID ,Halls System ,Education ,Bonmudi ,Kalidazh ,Chennai VIP College ,Nandambakkam Business Centre ,Dinakaran-Chennai VID: Halls Organization ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...