ஸ்பிக்நகர்: தெர்மல்நகரில் இருந்து ஊரணி ஒத்தவீடு பகுதி வழியாக தூத்துக்குடி லைன்ஸ் டவுன் செல்லும் பாதை பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெர்மல்நகர், கோயில்பிள்ளை நகர், கேம்ப்-1 பகுதியில் வசிக்கும் மக்கள் தூத்துக்குடிக்கு செல்வதற்கு பீச் ரோடு மற்றும் திருச்செந்தூர் ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் தெர்மல் அருகேயுள்ள ஊரணி ஒத்தவீடு வழியாக தூத்துக்குடி லைன்ஸ் டவுனுக்கு செல்லும் பாதையை பயன்படுத்துகின்றனர்.
இந்த பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பலர் தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளில் படித்து வருவதால் இந்த சாலையின் வழியாக சென்றால் எந்தவித ஆபத்தும் இல்லாமல் சென்று வரலாம் என்று கருதி இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 10 வருடத்திற்கும் மேலாக இந்த சாலையில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளபடவில்லை. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இருச்சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்பது அந்த பகுதிகளை சேர்ந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.