×

மற்ற மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் போது சென்னையை மட்டும் கொரோனா ஆட்டி படைப்பது ஏன்?

* அரசின் அறிவுரைகளை கொஞ்சமும் மதிப்பதில்லை என குற்றச்சாட்டு  
* சமூக விழிப்புணர்வே இல்லை
* பெரும்பாலான முகங்களில் மாஸ்க் மாயம்

சென்னை: தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் போது சென்னையில் மட்டும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்து ஆட்டி படைப்பது ஏன் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. அரசின் விதிகளை ஒழுங்காக கடைப்பிடிக்காவிட்டால் எத்தனை மாதங்கள் ஆனாலும் மீள்வது கடினம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சென்னை மக்கள் கொரோனா விழிப்புணர்வை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  சமூக இடைவெளியை சுத்தமாக மறந்து விட்டனர். மார்க்கெட், மளிகை கடைகள் போன்ற இடங்களில் கட்டாயம் என்பதால் பொருட்கள் வாங்கும் நேரத்தில் மட்டுமே மாஸ்க் முகத்தில் இருக்கிறது. பொருட்கள் வாங்கியவுடன் வழக்கம்போல பை அல்லது பாக்கெட்டுகளில் மாஸ்க் மறைந்து ெகாள்கிறது. கொரோனா பரவுவதற்கு முன்னர் தான் காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்குவதற்காக தினசரி கடைகளுக்கு சென்றனர். தற்போதும் கூட மொத்தமாக பொருட்களை வாங்குவதை விடுத்து அடிக்கடி ஷாப்பிங் செல்வது போல் கடைகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டன், சிக்கன், மீன் வாங்குவதற்காக படையெடுக்கின்றனர்.

கூட்டத்தில் சிக்கி பலர் தாமாகவே நோயை வாங்கி வீடுகளுக்கு வருகின்றனர். இக்கட்டான சூழ்நிலையில் கூட வாய்க்கு ருசியாக சாப்பிட ஆசைப்பட்டு நோய்க்கு இரையாகும் நிலை தான் சென்னையை பொறுத்தவரை தற்போது நடந்து வருகிறது. மதியம், இரவு ஆனால் போதும் பிரியாணி கடைகள் முன்பாக தவம் கிடந்து வருகின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை என்றால் சென்னையின் பிரியாணி கடைகள் முன்பு தான் பெரும்பாலான கூட்டம் நிற்கிறது. இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக புரளி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சானிடைசர் போட்டு அடிக்கடி கை கழுவும் வழக்கத்தையும் மெல்ல மெல்ல மறந்தே விட்டனர் சென்னை மக்கள் என்று தான் சொல்ல வேண்டும். சென்னைவாசிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தான் அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகும் கூட கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் ஒவ்வொரு நாளும் சென்னையில் 500, 600  பேர் என்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,200 என்று அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

இனிமேல் பஸ், ரயில் என பொது போக்குவரத்து தொடங்கப்பட்டால் சென்னையின் நிலைமை தலைகீழாக மாறிவிடும். சுயக்கட்டுப்பாடு என்ற ஒன்றை கடைப்பிடிக்காதவரை சென்னைவாசிகளை எத்தனை மாதங்கள் ஆனாலும் யாராலும் காப்பாற்ற முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தலைநகருக்கு பிழைப்புக்காக வந்தவர்கள் வேலைவாய்ப்பு இன்றி, பல ஆண்டுகள் வாழ வழி செய்த சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இன்னும் சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தால் சென்னைவாசிகளே பிழைப்புக்காக வேறு இடங்களுக்கு செல்லும் நிலை தான் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : Chennai ,districts , Districts, Madras, Corona, curfew
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...