×

4 மாவட்டங்களில் 108 டிகிரி வெயில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு

சென்னை: கடந்த 2 வாரமாக வானிலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களால் நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது. அதனால் 25, 26ம் தேதிகளில் வடமாநிலங்கள் சிலவற்றில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதற்கேற்ப கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் வெயிலின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 109 டிகிரி வரை உயர்ந்தது. நேற்றைய அளவுப்படி வேலூர், திருச்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கரூர் மாவட்டங்களில் 108 டிகிரி அளவு வெயில் பதிவானது. ஈரோடு, சேலம், மதுரை 106 டிகிரி, திருப்பத்தூர், பாளையங்கோட்டை, தர்மபுரி 102 டிகிரி, சென்னை உள்ளிட்ட  பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது.

இந்நிலையில், ஒரு பகுதியில் இடியுடன் மழை பெய்து வருவதால் வெப்பம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
இது ஒருபுறம் இருக்க, வெப்ப சலனம் காரணமாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை  பெய்யும்.  மேலும், விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருத்தணி ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 42 செல்சியஸ் வரை அதிகரிக்கும். அப்போது அனல்காற்று வீசும். அதனால் இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.



Tags : Thunderstorms ,districts ,Tamil Nadu , 4 districts, 108 degrees sun, Tamil Nadu, 19 districts, rain
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...