×

2 மாதமாக வெறிச்சோடிய திற்பரப்பு அருவி: குளுகுளு சீசனில் குளிக்க யாருமில்லை

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பில் வற்றாத கோதையாறு அருவியாக விழுவதால் குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் எப்போதும் தண்ணீர் கொட்டி வருகிறது. கடந்த 2 மாதத்துக்கு முன் கடுமையான வெயில் காரணமாக கோதையாற்றில் தண்ணீர் குறைந்தது. இதையடுத்து திற்பரப்பில் மிக குறைந்த அளவு தண்ணீர் துர்நாற்றத்துடன் கொட்டியது. எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களில் கொரோனா தடுப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.   கோதையாற்றில் அதிக தண்ணீர் வருவதால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் அதிகளவு கொட்டுகிறது. கடந்த 2 நாட்களாக வெயில் சிறிதும் இன்றி சாரல் மழையும், அவ்வப்போது இதமான காற்றும் வீசி குளுகுளு சீசன் நிலவி வருகிறது.
ஆனால் ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவிக்கும் யாரும் வருவதில்லை. இதனால் குளுகுளு சீசன் காலத்தில் திற்பரப்பு அருவி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சாரல் மழை நீடிப்பு
குமரி  மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது.  மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காணப்படுகிறது.   நேற்று பகல் பொழுது முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் சாரல்  மழை பொழிவதுமாக இருந்தது. மாவட்டத்தில நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக  சிற்றார்-2 அணை பகுதியில் 27.8 மி.மீ மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை  நீர்மட்டம் 32.55 அடியாக இருந்தது. அணைக்கு 126 கன அடி தண்ணீர் வரத்து  காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 33.60 அடியாக இருந்தது. அணைக்கு 52 கன  அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. சிற்றார்-1ல் 9.41 அடியாக  நீர்மட்டம் உள்ளது.  சிற்றார்-2ல் 9.51 அடியாக நீர்மட்டம் இருந்தது. பொய்கையில் 15.30 அடியும், மாம்பழத்துறையாறு அணையில்  45.11 அடியும், முக்கடல் அணையில் மைனஸ் 19 அடியும் நீர்மட்டம்  காணப்படுகிறது. மழை காரணமாக விளவங்கோடு தாலுகா பகுதியில் நேற்று மேலும் ஒரு  வீடு இடிந்து விழுந்தது.

மைனசில் முக்கடல் நீர்மட்டம்
பூதப்பாண்டி: நாகர்கோவில் நகருக்கு  நீர் ஆதாரமான முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 19  ஆடியானது. முக்கடல் அணையின் கொள்ளளவு 25 அடியாகும். மடைக்கு கீழே 20 அடி  கொள்ளளவு கொண்டது.  முக்கடல் அணையிலிருந்து ஒரு குழாய் மூலம்  திட்டு விளை, பூதப்பாண்டி,துவரங்காடு போன்ற பகுதிகளுக்கு குடிநீர்  விநியோகிக்கப்பட்டு வருகிறது.  இரு குழாய்கள் மூலம் நாகர்கோவில்  மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது . தற்போது  கோடை காலத்தில் முக்கடல்  அணை நீர்மட்டம் மைனஸ் 19 அடியாக சரிந்துள்ளது. அனந்தனார் சானலில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் பேச்சிப்பாறை  தண்ணீரை கொண்டு செல்ல முடியாத  சூழ்நிலை உள்ளது.

Tags : Open Falls, 2 months
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு