×

வங்கியில் நான் கடனாக வாங்கியது மக்கள் பணம் என்னை திவாலாக்க அரசால் முடியாது: விஜய் மல்லையா வாதம்

புதுடெல்லி: ‘வங்கிகளில் நான் கடனாக வாங்கி இருப்பது மக்களின் பணம். அதனால், என்னை திவாலானவர் என இந்திய அரசால் அறிவிக்க முடியாது,’ என்று விஜய் மல்லையா கூறியுள்ளார். ‘கிங் பிஷர்’ நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா,  இந்திய ஸ்டேட் வங்கி உட்பட 12 பொதுத்துறை வங்கிகளில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு, அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். அவர் மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளன.  மேலும், இந்த கடன் தொகையை வட்டியுடன் வசூலிப்பதற்கு ஏதுவாக விஜய் மல்லையா மீது இந்திய ஸ்டேட் வங்கி தலைமையிலான 12 பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு, லண்டன் தீவால் நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தன. அதில், கடனுக்கு ஈடாக வங்கிகளில் மல்லையா கொடுத்துள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு சொத்துகளை பறிமுதல் செய்து விற்பதற்கு ஏதுவாக, அவரை திவால் ஆனவராக அறிவிக்கும்படி கோரப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட மனுவை அவை தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கு விசாரணை கடந்த வெள்ளியன்று நீதிபதி மைக்கேல் பிரிக்ஸ் முன்னிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.  இதில், இந்திய அரசு மற்றும் மல்லையா தரப்பு வழக்கறிஞர்களின் இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, மல்லையாவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்தியாவில் உள்ள வங்கிகளிடம் இருந்து விஜய் மல்லையா வாங்கியுள்ள கடன், பொதுமக்களின் பணமாகும். எனவே, அவருக்கு சொந்தமான வெளிநாட்டு, உள்நாட்டு சொத்துகளை பறிமுதல் செய்யும் அதிகாரம் வங்கிகளுக்கு கிடையாது. மேலும், இந்திய அரசால் அவரை திவால் ஆனவராக அறிவிக்க முடியாது,’’ என்றார். இருதரப்பு வாதங்கள் முடிந்துள்ள நிலையில், இந்த வழக்கில் அடுத்த சில வாரங்களில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post வங்கியில் நான் கடனாக வாங்கியது மக்கள் பணம் என்னை திவாலாக்க அரசால் முடியாது: விஜய் மல்லையா வாதம் appeared first on Dinakaran.

Tags : Vijay Mallya ,New Delhi ,Government of India ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...