×

ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் உடலை பாதிக்கும் மதுவையும் வைத்திருக்கிறது தமிழக அரசு. அரசின் செயல் முரண்பாடாக உள்ளதே! : உயர்நீதிமன்றம் கருத்து

மதுரை : நோய் எதிர்ப்பு சக்திக்கு குடிநீர் வழங்கும் அரசு மதுபானத்தை வழங்கலாமா என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுக்கடைகளுக்கு எதிராக மனு தாக்கல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக மதுரை பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த பொனிபாஸ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மே 3-க்கு பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் கோயம்பேடு சந்தையின் பணியாற்றிய பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் கரோனா பரவல் நிலை சமூகபரவல் நிலையை அடைந்து விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது சரியல்ல. டாஸ்மாக் கடைகளை திறந்தால் நோய்த்தொற்று பரவல் சமூக பரவலை தொடும். இதனால் இவ்வளவு நாளாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு பயனற்றாகிவிடும்.மது அருந்துதல், புகைபிடித்தல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து மது அருந்துவோரை எளிதில் கரோனா தொற்றுக்கு ஆளாக செய்யும். எனவே டாஸ்மாக் கடை திறப்பு தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்துள்ளது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்க அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் வைக்கபட்ட  கோரிக்கையும் இந்த வழக்கில் வைக்கப்பட்ட கோரிக்கையும் ஒன்றாக இருப்பினும் அதற்கான காரணங்கள் வேறாக இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் என்னவெனில் சமூக இடைவெளி கடைபிடிப்பதில் உள்ள சிக்கலை குறிப்பிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள்,
ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் உடலை பாதிக்கும் மதுவையும் வைத்திருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசின் செயல் முரண்பாடாக உள்ளதே என கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதாட கால அவகாசத்தை கோரியதையும் நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Kapasura ,government ,Tamil Nadu ,High Court , Kapasura Drinking Water, Liquor, High Court, Opinion, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை...