×

கொரோனா 20:20 அல்ல டெஸ்ட் மேட்ச் போல உடலில் நிறைய நாள் இருக்கும்: டாக்டர் ராமகோபால் கிருஷ்ணன்

* கொரோனா வைரஸ் தொற்று வந்தால் திரும்ப கொரோனா வராது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு இன்னும் ஆதாரம் இல்லை. அதற்கான ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை கொரோனா வந்தால் திரும்ப வராது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளதால், கொரோனா லேசான அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 100 கொரோனா நோயாளிகள் இருந்தால் அதில் 98 பேருக்கு லேசான அறிகுறி அதாவது அவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. அவர்களுக்கு லேசான சளி, இருமல் இருக்கும். இந்த மாதிரியான நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்தால் இரண்டு பிரச்னை ஏற்படும். ஒன்று மருத்துவமனையில் இந்த மாதிரியான நோயாளிகளால் படுக்கைகள் நிரம்பி விடுகிறது. இதனால்  கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ளவர்களை அனுமதித்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இது ஒரு பெரிய பிரச்னையாகி விடுகிறது. இரண்டாவது லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு எந்த வைத்தியமும் இல்லை. அவர்கள் வீட்டில் இருந்தாலோ அல்லது மருத்துவமனையில் இருந்தாலோ அவர்களது எதிர்ப்பு சக்தியால் தானாகவே அவர்களுக்கு குணமாகி விடுகிறது. சாதாரண இருமல் சளி இருந்தால் வீட்டில் இருங்கள். ஓய்வு எடுங்கள், மருந்து சாப்பிடுங்கள் என்று கூறுவோம். அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை. அப்படி தான் கொரோனாவுக்கு ஆலோசனை கொடுக்கிறோம்.  கொரோனா எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த கொரோனா 20/20 கிரிக்கெட் மாதிரி இல்லை. இது டெஸ்ட் கிரிக்கெட் மாதிரி. இது நம்முடன் 3 முதல் 6 மாதம் அல்லது 12 மாதங்கள் வரை கொரோனா வைரஸ் நம்மிடம் இருக்கலாம்.

இரண்டு வருடம் வரை கூட கொரோனா வைரஸ் இருக்கலாம் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை தான். அந்த நேரம் வரை நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும். இந்த வைரஸ் தொற்று 100 பேருக்கு இருந்தால் எவ்வளவு பேர் இறந்து போகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால், தமிழகத்தில் 0.6 சதவீதம் தான் உயிரிழப்பு இருக்கிறது. அதே நேரத்தில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், குஜராத் மாநிலங்களில் நிறைய சதவீதம் அளவிலான மக்கள் கொரோனா தொற்றுக்கு இறந்து போகிறார்கள். ஒரு நோய் ஏற்பட்டால் பிழைக்க வேண்டும். எல்லோரும் குணமாக வேண்டும். எவ்வளவு பேருக்கு வந்தாலும், யாரும் இறந்து போக கூடாது என்று தான் நினைக்கிறோம். இங்கு பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் அந்த அறிகுறி இருப்பது கூட தெரியாமல் நன்றாக இருக்கிறார்கள்.

எனவே, தான் அது போன்றவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, தேவையான மருந்துகளை எடுத்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
 வீட்டில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும். 7 நாட்கள் முதல் 14 நாட்கள் தனியாக இருக்க வேண்டும். உடன் இருப்பவர்களை கூட சந்திக்க கூடாது. சாப்பாடு எல்லாம் தனியாக தான் இருக்க வேண்டும். சில வீடுகளில் 10 பேர், 25 பேர் இருந்தால் அங்கு தனிமைப்படுத்தி கொள்வது கடினம். அதே நேரத்தில் தனிமைப்படுத்தி கொள்ள வசதி இருந்தால் அவர்கள் மட்டும் அரசு ஒப்புதலுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது மிக, மிக முக்கியமான விஷயம். மருத்துவமனைகளில் பெரிய கூட்டம் வராமல் இருக்க வேண்டும் என்றால் இதை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஊரடங்கை படிப்படியாக தளர்த்தினாலும், நாம் நீண்டகால திட்டம் மாதிரி எடுத்து கொள்ள வேண்டும். 2 மீட்டர் இடைவெளி, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, முகக்கவசம் அணிவதை பழக்கவழக்கங்களில் ஒன்றாக ஆக்கிக்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பை இந்த வழியில்தான் கட்டுப்படுத்த முடியும்.


Tags : Ramagopal Krishnan ,Corona 20 , Corona, Test Match, Dr. Ramagopal Krishnan
× RELATED மதுரையில் 20 பேரும், கோவையில் 14 பேரும்...