×

உயிர் பயம், எதிர்கால வாழ்க்கை பயம் படுத்தும் பாடு: தென்மாவட்டங்களுக்கு 3வது நாளாக வாகனங்களில் படையெடுக்கும் மக்கள்

* கிராம தெருக்கள் வழியாக செல்லும் வாகனங்கள்
* தொழில், கூலி வேலைகளை உதறிவிட்டு செல்கின்றனர்
* சென்னை வாழ்க்கைக்கு குடும்பத்துடன் வருவது சந்தேகம்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் தென்மாவட்டங்களுக்கு 3வது நாளாக மக்கள் வாகனங்களில் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் பரபரப்பு அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் இப்போதைக்கு இருக்க வேண்டாம் என்று  நினைக்கும் சிறு கடைகள் நடத்தியவர்கள் தொழிலை விட்டும், பெரும்பாலான கூலி தொழிலாளர்கள் வேலையே வேண்டாம் என்ற மனநிலையில் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். இன்னும் பலர் குடும்பங்களை சொந்த ஊரில் விட்டுவிட்டு மீண்டும் தனியாக வர திட்டமிட்டுள்ளனர்.  இதற்கெல்லாம் 40 நாளுக்கு மேலாக ஒரே அறையில் அடைந்து, கிடைத்த உணவை சாப்பிட்டு குழந்தைகளின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் இருந்ததுதான் இந்த மனமாற்றத்துக்கான காரணம் என்கிறனர் தென்மாவட்ட மக்கள்.

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட புறநகர் பகுதிகளிலும் நோய் தொற்று அதிகரித்துள்ளது. மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர், பல்வேறு உணவு, வேலை இழப்பு, வீட்டு வாடகை பிரச்னை, வங்கிக் கடன், இஎம்ஐ மற்றும் வெளியில் சொல்ல முடியாத பிரச்னைகளை கடந்த 40 நாளில் சந்தித்துவிட்டனர். அவர்களுக்கு அரசோ, தன்னார்வலர்களோ உணவு வழங்கவோ, நீரிழிவு உள்பட பல்வேறு நோய்களுக்கு மருந்து இல்லாமலும், பெண்களின் மாதவிடாய் நேரத்தில் சானிடரி நாப்கின் வாங்க கையில் காசு இல்லாமலும், குழந்தை விரும்பிய தின்பண்டங்களை வாங்கவோ முடியவில்லை.

தனியார் கடைகளில் அரிசி வாங்கி உணவு சாப்பிட்டவர்கள், பணம் இல்லாத காரணத்தால் ரேஷன் அரிசியை திடீரென சாப்பிடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கெல்லாம் ஊரடங்கு முடக்கத்தால் வேலை இல்லை. பணம், பொருள் கொடுத்து உதவி செய்ய ரத்த சொந்தங்கள் இல்லை. இதனால் கூலி தொழில் செய்யும் பல குடும்பங்களில் ஒரு வேளை உணவே சவாலாக அமைந்துவிட்டது. இந்நிலையில் பல குடும்ப தலைவர்கள், மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்த முடிவின்படி சென்னையை காலி செய்துவிட்டு சொந்த ஊரில் ஒரு பெட்டிக் கடை வைத்தாவது பிழைத்துக் கொள்ளலாம். இப்படி தெரியாத ஊரில் அனாதையாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு சென்றுவிட்டனர். குறிப்பாக சென்னை பக்கமே திரும்பக் கூடாது என்று கூலி தொழிலாளர்கள் குடும்பத்துடன் வேலையே வேண்டாம் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கின்றனர். சிலர் குடும்பத்தை சொந்த ஊரில் வைத்துவிட்டு தான் மட்டும் சென்னைக்கு வர திட்டமிட்டுள்ளனர்.

மேலும் சிறு வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வைத்துள்ளவர்கள் குடும்பத்தை சொந்த ஊரில் விட்டுவிட்டு தாங்கள் மட்டும் சென்னைக்கு திரும்பும் வகையில் பயணத்திட்டத்தை வைத்து தென் மாவட்டங்களுக்கு காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அந்த வகையிலும் உயிர் பயத்திலும், எதிர்கால வாழ்க்கை பயத்திலும் பலர், கடந்த சனிக்கிழமை காலை முதல் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக திண்டிவனம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு பைக், கார், சரக்கு வாகனங்களில் கூட்டம் கூட்டமாகவும், குடும்பம் குடும்பமாகவும் செல்கின்றனர். அவர்களை வண்டலூர், பரனூர், ஆத்தூர் சுங்க சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில் அனுமதி கடிதம் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், பைக், கார்களில் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையொட்டி, நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. சிலர் தடையை மீறி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 3வது நாளாக பொதுமக்கள், வாகனங்களில் சென்றனர். சில இடங்களில் போலீசார் அனுமதி மறுத்ததால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காக சுங்கச்சாவடி வழியாக செல்லாமல் கிராமங்கள் வழியாக செல்கின்றனர்.


Tags : Southern Districts , Corona, curfew, fear of life, southbound, vehicles people
× RELATED “தென் மாவட்டங்களுக்கு செல்லும்...