×

“தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும்”: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் புதிதாக துவங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்று கடந்த ஜனவரி 24ம் தேதி போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்களும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தற்போது சென்னையில் சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் என்றும் பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விட மட்டும் அனுமதிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன், அனைத்து ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் உள்ளதால், கோயம்பேட்டிலும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.

அதேபோல தனியார் ஆம்னி பேருந்துகள் நகருக்குள் பயணிகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கக்கூடிய இடங்களில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரனும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, சென்னைக்குள்ளேயே பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி வழங்கினால், கிளாம்பாக்கம் செல்வதற்கு முன்னதாகவே பேருந்து நிரம்பிவிடும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வந்ததற்கான நோக்கம் வீணாகிவிடும் என தெரிவித்த நீதிபதி மஞ்சுளா, ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் கொண்ட வரைபடத்தை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post “தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும்”: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Borur ,Tamil Nadu government ,iCourt ,Chennai ,Tamil Nadu ,Chennai High Court ,Surat ,Tambaram ,Southern Districts ,Klampakkam Bus Station ,Surat, Borur ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...