சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி வடமாநில இளைஞர்கள் திடீர் போராட்டம்: பல்லாவரம், கிண்டி, ஆலந்தூரில் பரபரப்பு

சென்னை: பல்லாவரம், கிண்டி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப உதவும்படி திடீர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  பல்லாவரம் அடுத்த கவுல்பஜாரில், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்து, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் வேலை இழந்து, தாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சரியான உணவு கிடைக்காமல் தொழிலாளர்கள் தவித்தனர்.

இந்த நிலையில், மீண்டும் மே 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால், தெலங்கானாவில் சிறப்பு ரயில் மூலம் வடமாநில இளைஞர்கள் 1200 பேர் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது போல், தங்களையும் தமிழக அரசு சிறப்பு ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்  நேற்று திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சங்கர் நகர் போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வட மாநில தொழிலாளர்கள், போலீசாரின் வாகனங்களை முற்றுகையிட்டு, தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

அவர்களிடம் பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் மற்றும் பல்லாவரம் உதவி கமிஷனர் தேவராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் உயரதிகாரிகளிடம் பேசி, இன்னும் இரண்டு நாளில் சொந்த ஊர் செல்ல மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதேபோல, கிண்டி மற்றும் வேளச்சேரி நேரு நகர் பகுதியில் ஜார்கண்ட், ஒடிசா, பீகார் போன்ற வட மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாடகை வீடுகளில் குடும்பத்துடன் தங்கி, வேளச்சேரி பீனிக்ஸ் மால், கட்டுமான நிறுவனங்கள், ஓட்டல், பியூட்டி பார்லர் போன்றவற்றில் வேலை செய்து வந்தனர்.  

இந்நிலையில், வெளி மாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்ல அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, வேளச்சேரி மற்றும் கிண்டி நேரு நகர் பகுதியில் தங்கியுள்ள வட மாநில மக்கள் செல்போன் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர். அதன்படி, 150க்கும் மேற்பட்ட வடமாநில மக்கள் நேற்று கிண்டி செக்போஸ்ட் சாலையில் திரண்டு, அங்கிருந்து சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர். இதற்காக, தங்களது பகுதியில் இருந்து செக்போஸ்ட நோக்கி கூட்டமாக நடக்க ஆரம்பித்தனர்.இதுபற்றி அறிந்த கிண்டி போலீசார் விரைந்து சென்று, ஐந்து பர்லாங் சாலையில் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நீங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதையடுத்து, அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

கிண்டி தொழிற்பேட்டை ஆலந்தூர் சாலையில் தனியார் நிறுவன கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள்  வேலை பார்த்து வந்தனர். அவர்கள் நேற்று கட்டுமான நிறுவனத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். கிண்டி போலீஸ் உதவி கமிஷர் சுப்புராயன், இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. சென்னையில் 3 இடங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>