×

வாகனங்களுக்கு அதிக கட்டணம், பொருட்களை ஏற்ற ஆட்கள் தட்டுப்பாடு மளிகை பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு

* தேவைக்கு மட்டுமே   பொருட்களை வாங்க அறிவுறுத்தல்
* சோப்பு, பிஸ்கட், டெட்டாலுக்கு தட்டுப்பாடு

சென்னை: வாகனங்களுக்கு அதிக கட்டணம், பொருட்களை ஏற்ற ஆட்கள் தட்டுப்பாடு போன்றவற்றால் மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வருகிற 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு வருகிறது. கர்நாடகாவில் இருந்து சர்க்கரை, கோதுமையும், ஆந்திராவில் இருந்து மிளகாய், கொத்தமல்லி, அரிசியும். மகராஷ்டிராவில் இருந்து கடலைப்பருப்பும் வருகிறது. ஊரடங்கு உத்தரவால் சரக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், மளிகை பொருட்கள் விலை உயர தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில் மளிகை பொருட்களுக்கு பற்றாக்குறை அறவே இல்லை என்று வணிகர்கள் கூறியுள்ளனர். இது குறித்து மளிகை கடை நடத்தி வரும் பாண்டியராஜன் கூறியதாவது: கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் கொத்தமல்லி கிலோ 85லிருந்து 100, குண்டு மிளகாய் 135லிருந்து 155, துவரம் பருப்பு 87லிருந்து 100, உளுந்தம் பருப்பு 97லிருந்து 130, பாசிப்பருப்பு 105லிருந்து 130, கடலைப்பருப்பு 54லிருந்து 66, சர்க்கரை 35லிருந்து 44, கோதுமை மாவு 30லிருந்து 45, மிளகு 350லிருந்து 450, மிளகாய் 145லிருந்து 160, 170 என்று விற்பனையாகிறது. தமிழகத்தில் மளிகை பொருட்களுக்கு பற்றாக்குறை என்பது இதுவரை இல்லை. மக்கள் 1 மாதத்துக்கு முன்பே தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி ஸ்டாக் வைத்து விட்டனர். அவர்கள் தேவைக்காக வாங்கியிருந்தால் எல்லா பொருட்களும் இப்போது அனைவருக்கும் கிடைத்திருக்கும்.

பொருட்களை மக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் பக்கத்து மாநிலங்களான ஆந்திராவில் இருந்து, அவர்கள் ஸ்டாக் வைத்துள்ள பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம். பற்றாக்குறை என்பது சோப்பு, ேபஸ்ட் போன்றவற்றிற்கு தான் இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த விலை என்பது மொத்த மார்க்கெட்டில் மட்டும் தான். சில்லரை விற்பனையில் மளிகை பொருட்கள் சுமார் 15 சதவீதம் அளவுக்கு கூடுதலாக விற்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு வணிகர்  சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை மளிகை உள்ளிட்ட பொருட்கள் விலை உயரவில்லை. வடமாநிலங்களில் இருந்து தான் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் வாகனங்கள் குறைவாக தான் இயக்கப்படுகிறது. ெபாருட்களை ஏற்ற வாகனங்கள், ஆட்கள் கிடைப்பது இல்லை. அப்படி கிடைத்தாலும் வாகன கட்டணம், ஏற்றுவதற்காக கூலி போன்றவற்றை அதிகமாக கேட்கின்றனர். இதனால் செலவு அதிகமாகிறது. இது போன்ற காரணங்களால் தான் அங்கிருந்து வரும் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மக்கள் தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கி வைத்தால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. நம்மிடம் உற்பத்தி என்பது 40 சதவீதம் தான் உள்ளது.

இது மக்களின் தேவையை பூர்த்தி செய்யாது. 60 சதவீதம் உற்பத்தியிருந்தால் தான் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். அரசும் எல்லா பொருட்களும் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அரசே பொருட்களின் விலையை நிர்ணயிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தற்போது சோப்பு, பிஸ்கட், டெட்டால் போன்றவற்றிற்கு தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த கம்பெனிகள் மூடப்பட்டுள்ளதால் தான் தட்டுப்பாடு ஏற்படக்காரணமாகும்.

Tags : Vehicles, high fees, products, groceries
× RELATED வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல...