×

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கான பிரத்யேக உணவு என்னென்ன? ஊட்டச்சத்து நிபுணர் பேட்டி

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கையில் இறங்கி வருகிறது. அதே நேரத்தில் நேற்று வரை 50 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சென்னையை பொறுத்தவரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை,  ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உணவு வகைகள் தயாரித்து வழங்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சுஜாதா வெங்கடேசன் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு காலை 6 மணியளவில் இஞ்சி, தோல் நீக்கப்படாத எலுமிச்சை பழம் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் வழங்கப்படுகிறது.  காலை 8 மணியளவில் சப்பாத்தி, இட்லி, சம்பா கோதுமை உப்புமா, 2 வேக வைத்த முட்டை மற்றும் ஒரு கப் பால் வழங்கப்படும். காலை 10.30 மணியளவில் சாத்துக்குடி ஜூஸ், மதியம் 12 மணியளவில் இஞ்சி மற்றும் எலுமிச்சை சூடு தண்ணீர், மதிய உணவு 1.30 மணியளவில் சப்பாத்தி, புதினா, தயிர், சாம்பார் சாதத்துடன் 2 வகையான பொரியல், மிளகு ரசம், வேக வைத்த மூக்கு கடலை வழங்கப்படும்.

மாலை 3 மணி அளவில் மஞ்சள், மிளகு மற்றும் உப்பு கலந்த சுடு தண்ணீர் கொடுக்கப்படுகிறது.  மாலை 5 மணியளவில் பருப்பு ரசம், வேக வைத்த மூக்கு கடலை வழங்கப்படும். இரவு 7.30 மணிக்கு ரைஸ், ரவா உப்புமா, இட்லி அல்லது பீன்ஸ் கேரட் ரவா கிச்சடி, சப்பாத்தி அல்லது சேமியா, வெங்காய சட்னி, காய்கறி குருமா, ஒரு கப் பால், இரவு 9 மணியளவில் இஞ்சி மற்றும் எலுமிச்சை சுடு தண்ணீரும், இரவு 11 மணியளவில் மஞ்சள், மிளகு மற்றும் உப்பு கலந்த சுடு தண்ணீர் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கொரோனா வார்டில் உள்ள டாக்டர்களுக்கு பேப்பர் சால்டுடன் 2 வேக வைத்த முட்டை, கீரை சூப் அல்லது பெப்பர் வாட்டர் வழங்கப்படும். இதேபோல, அங்கு பணியாற்றுபவர்களுக்கும் இதே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Nutritionist , Corona, Specialized Food, Nutritionist
× RELATED சத்துணவு ஊழியரின் ஊதிய பிடித்தம் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்