×

பங்குச்சந்தை திடீர் ஏற்றம்: உயர்வு நீடிக்குமா?

மும்பை: தொடர்ந்து இழப்பை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்று திடீர் ஏற்றம் கண்டன. கொரோனா வைரசால் உலக அளவில் தொழில்துறை முடங்கி கிடக்கிறது. இதனால், பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. கடந்த மாதம் 20ம் தேதியில் இருந்து இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இதுவரை ₹45 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3, 5 மற்றும் 13ம் தேதிகளில் மட்டும் ஏற்றம் கண்டன. மற்ற அனைத்து நாட்களும் முதலீட்டாளர்களுக்கு இழப்பையே அளித்துள்ளன. பல்வேறு நாடுகளுக்கு பரவுவது தீவிரம் அடைந்து வருவதால் இழப்பு தவிர்க்க முடியாதது ஆகி வருகிறது.  நேற்று முன்தினம் தேசிய பங்குச்சந்தை நிப்டி 8,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு கடந்த 2016 டிசம்பரில் ஏற்பட்ட சரிவை விட மோசமான சரிவை சந்தித்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 37 மாதங்களில் இல்லாத சரிவாக 27,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது.

வர்த்தக இடையில் அதிகபட்சமாக 2,155.04 புள்ளிகள் சரிந்து 26,714.46 வரை வீழ்ச்சி அடைந்தது. ஆனால், மாலையில் சற்று மீண்டன. இருப்பினும் வர்த்தக இடையில் ஏறபட்ட கடும் சரிவால் 15 நிமிடங்களிலேயே முதலீட்டாளர்களுக்கு 7.22 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.  இந்நிலையில், நேற்று பங்குச்சந்தைகளில் எதிர்பாராத விதமாக ஏற்றம் ஏற்பட்டது. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றத்தை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சற்று உற்சாகத்துடன் காணப்பட்டன. இந்த வாரத்தில் தொடர்ந்து 4 நாட்களாக இழப்பை சந்தித்த நிலையில், நேற்று வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை 1,627.73 புள்ளிகள் உயர்ந்து 29,915.96 ஆகவும் இருந்தது. ஆனால், வர்த்தக துவக்கத்தில் 27,932.67 புள்ளிகள் வரை சரிந்தும், 30,418.20 புள்ளிகள் வரை உயர்ந்தும் காணப்பட்டது.

இதுபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி, 482 புள்ளிகள் உயர்ந்து 8,745.45 புள்ளிகளாக இருந்தது. இருப்பினும் இந்த ஏற்றம் நீடிக்குமா என்ற கவலையும் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தின் முதல் 4 நாள் வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 19,49,461.82 கோடி இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  நேற்று ஒரு நாள் ஏற்றத்தில் பங்குகள் மதிப்பு 6,32,362.29 கோடி உயர்ந்தது.

Tags : Stock market, boom, corona
× RELATED மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை:...