×

வெளிநாடுகளில் இருந்து மாவட்டத்திற்கு திரும்பிய 34 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை கண்காணிப்பு

தேனி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளிலிருந்து தேனி மாவட்டத்திற்கு திரும்பிய 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதல் 154 நாடுகளுக்கும் மேலான நாடுகளில் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதனால், உலகம் முழுவதும் பெரும் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இந்த நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கூட்டமாக இருக்கக் கூடாது, வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும்.
முகம், வாய், மூக்கு, கண் ஆகியவற்றை கையால் தொடக் கூடாது.

வெளியிடங்களுக்கு சென்று வீடு திரும்பியதும் கைகளை நன்கு சோப்பு போட்டு தண்ணீரில் 20 வினாடிகள் கழுவ வேண்டும் என்றெல்லாம் சு
காதாரத் துறை அறிவித்துள்ளது. இந்நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதிப்படையாமல் தவிர்க்கவும், சினிமா திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், பள்ளி, கல்லூரிகள், உடற்பயிற்சி கூடங்கள், மது அருந்தும் கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மருத்துவமனையில் இந்நோய்க்காக தனிசிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் நான்கு பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு யாருக்கும் கோரோனா இல்லை என முடிவு வந்துள்ளது.

இது குறித்து மாவட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் அஜித்சாமுவேலிடம் கேட்டபோது, ‘ஜெர்மனி, சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் இருந்து தேனி மாவட்டம் வந்துள்ள 64 பேருக்கு கடந்த ஒரு மாத காலத்தில் கொரண்டைன் கண்காணிப்பு மைய வளாகத்திற்குள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இதில், தொடர்ந்து 28 நாட்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டதில் 34 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பாக்கியுள்ள 34 பேர் இன்னமும் சுகாதாரத் துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர் காலை, மாலை என இரு வேளைகள் சென்று, அவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி ஏதும் உள்ளதா என கண்காணித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் ஏற்கனவே கேரள எல்லைகளான முந்தல், கம்பம்மெட்டு, லோயர்கேம்ப் பகுதி சோதனை சாவடிகளில் கொரோனா சோதனை மையம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் கேரள எல்லையான குமுளியில் நான்காவது சோதனை மையம் அமைக்கப்பட்டு சுகாதார அலுவலர்கள் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

கணவாய் மேடு தேவாலயத்தில் தவக்கால வழிபாடுகள் ரத்து ஆண்டிபட்டியிலிருந்து உசிலம்பட்டிக்கு செல்லும் வழியில் கணவாய் பகுதியில் அன்னை வேளாங்கன்னி திருத்தலம் உள்ளது. இங்கு கடந்த 40 ஆண்டுகளாக ராயப்பன்பட்டி, கம்பம், அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், போடி, சிந்தலைச்சேரி, சின்னமனூர், கோட்டூர், தேனி, பெரியகுளம், வருசநாடு, உசிலம்பட்டி, செம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த தேனி மறைவட்ட கிறிஸ்துவ பொதுமக்களால் ஆண்டுதோறும் தவக்கால திருப்பயணமும், திருவழிப்பாடும் நடப்பது வழக்கம்.

தற்போது தவக்கால விழா நடந்து வரும் நிலையில், வருகிற 22ம் தேதி மாலை கணவாய் வேளாங்கன்னி திருத்தலத்தில் தவக்கால திருப்பயணம் மற்றும் திருவழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் நோய் தவிர்க்க மதவழிபாடு தளங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இத்திருத்தலத்தில் 22ம் தேதி நடக்கவிருந்த அனைத்து விழாக்களும் இந்தஆண்டு ரத்து செய்யப்படுவதாக ஆலய பங்குத்தந்தை ஜான்மார்ட்டின் தெரிவித்துள்ளார்.


Tags : persons ,district ,Health Department , Returning to the district from abroad Health Department monitoring 34 people
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...