×

எனது ஆதார்... எனது அடையாளம் ‘குளோஸ்’ பிரவுசிங் சென்டர் மூலம் போலி ஆதார் கார்டு தயார்: சிவகங்கையில் பகீர் மோசடி

சிவகங்கை: சிவகங்கையில், ஒரே நபருக்கு எத்தனை ஆதார் கார்டு வேண்டுமானாலும் தயார் செய்து தனியார் பிரவுசிங் சென்டர் மூலம் வழங்கும் மோசடி நடந்து வருகிறது. இந்தியாவில் காஸ் சிலிண்டர் மானியம், பல்வேறு உதவித் தொகை, பள்ளி மாணவர்களுக்கான பொது தேர்வு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் தற்போது ஆதார் எண் கேட்கப்படுகிறது. ஆதார் அட்டையில் 12 இலக்க எண்கள், அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், பிறந்த தேதி, முகவரி, பாலினம் ஆகிய டெமோகிராபி விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தியனின் ஒரு அடையாள சான்றாக தற்போது ஆதார் விளங்குகிறது. தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் வழங்க ஆதார் அட்டையை ஆதாரமாக பயன்படுத்துகின்றன. ஒரு முறை கடன் பெற்று அந்த கடன் கட்டி முடிக்கும் வரை அந்த ஆதார் அட்டையில் உள்ள நபருக்கு ேவறு கடன் வழங்குவதில்லை.

இதனால் வேறொருவருடைய ஆதார் அட்டையில் கடன் கேட்பவருடைய புகைப்படத்தை வைத்து, புதிதாக போலி ஆதார் அட்டையை தயார் செய்யும் மோசடி சிவகங்கை பகுதியில் அதிகரித்துள்ளது. கடைகளில் ஜெராக்ஸ் எடுக்க வருபவர்களின் ஆதார் அட்டைகளில் உள்ள 12 இலக்க எண்கள், அந்த அட்டையின் உண்மையான நபருக்கு பதில் வேறு ஒருவரின் புகைப்படம் என, விரும்பும் வகையில் ஆதார் அட்டையை போலியாக தயார் செய்கின்றனர். ஆதார் அட்டையை போட்டோ ஷாப் செய்து போலியாக தயார் செய்வதில் பிரவுசிங் சென்டர்களை சேர்ந்தவர்களே முக்கிய பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு போலி ஆதாருக்கும் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை பணம் வழங்கப்படுகிறது. தனியார் பைனான்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் சிலருக்கும் இதில் பங்கு உள்ளது.

மதுரையை மையமாக கொண்ட தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கடன் வழங்க, சிவகங்கை பகுதியில் உள்ள பிரவுசிங் சென்டர் மூலம் இதுபோல் ஆயிரக்கணக்கான போலி ஆதார் அட்டைகளை தயார் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தங்களது புகைப்படத்தை வேறு நபரின் ஆதார் அட்டையில் பயன்படுத்தியதாக சிவகங்கையை சேர்ந்த மகளிர் குழுவினர் சிலர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்த சிலர் கூறுகையில், ‘‘தனியார் மைக்ரோ பைனான்சில் கடனை கட்டி முடிக்காத சிலர் புதிய கடன் பெற பைனான்சில் பணியாற்றும் சிலர் 3 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு சிவகங்கையில் உள்ள ஒரு பிரவுசிங் சென்டர் மூலம் போலி ஆதார் கார்டு தயார் செய்து கொடுக்கின்றனர். குறிப்பிட்ட நபர்களின் எண்ணுக்கு பதிலாக குழந்தைகளின் ஆதார் எண்ணை மாற்றிக் கொடுக்கின்றனர். போலியாக ஆதார் கார்டுகள் தயார் செய்து கொடுக்கின்றனர்.

இவற்றை கடன் பெற மட்டும் பயன்படுத்துகிறார்களா அல்லது வெளிநாடு தொடர்புள்ள வேறு செயல்களுக்கும் பயன்படுதுகிறார்களா என்பது குறித்து அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும். இதனால் அச்சமாக உள்ளது’’ என்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புகார் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட மையம் உள்பட ஆதார் வழங்கும் அனைத்து இடங்களிலும் விசாரித்து வருகிறோம். ஆனால் ஆதார் வழங்கும் இடங்களில் எவ்வித பிரச்சனையும் இல்லை. குறிப்பிட்ட பிரவுசிங் சென்டர்களில் மட்டுமே மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.


Tags : Ready ,Sivagangai , Aadhaar, Ready, Sivagangai, Fraud
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி