×

ஆய்வுக்கு 10 ஆயிரம் கட்டணம் திருவள்ளுவர் பல்கலை சுற்றறிக்கைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உறுப்புக் கல்லூரிகள், வருடாந்திர ஆய்வுக்கு ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தலா 10 ஆயிரம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்ற  திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் மரிய அந்தோணி ராஜ் உள்ளிட்ட 3 பேர் தாக்கல்  செய்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த ஜனவரி 24ம் தேதி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் அனைத்திற்கும் ஒரு  சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற கல்லூரிகள், வருடாந்திர ஆய்வுக்கு ஆன்லைனில்  பதிவு செய்ய வேண்டும். ஆய்வு கட்டணமாக ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தலா ₹10 ஆயிரம், 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும்.

அதேபோல, ஆய்வுக்கு பதிவு செய்யாத கல்லூரிகள் 2020 - 21ம் கல்வி ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு  அனுமதி வழங்கப்பட மாட்டாது. ஆய்வுக்  கட்டணம் வசூலிப்பதன் மூலம், கல்லூரிகள் தங்கள் கட்டணங்களை உயர்த்தும் நிலை ஏற்படும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.  மாணவர்களின் கல்வியில் கேள்விக்குறியை இந்த சுற்றறிக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றறிக்கை விதிமுறைகளுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.  சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில்  கூறப்பட்டிருந்தது.  இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பல்கலைக்கழகத்தின்  சுற்றறிக்கைக்கு  இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்  மற்றும் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Thiruvalluvar University , 10 thousand, study, Thiruvalluvar ,University,
× RELATED முறைகேடுகளை தொகுத்து நூலாக வெளியிட்ட...