×

முறைகேடுகளை தொகுத்து நூலாக வெளியிட்ட பணியாளர்கள் போலீசார் தடுத்து நிறுத்தினர் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்த

திருவலம், ஜன.4: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை தொகுத்து நூலாக வெளியிட்ட பணியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த சேர்க்காட்டில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2002ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு பணி நியமனம், நிர்வாகம் மற்றும் தேர்வு குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த முறைகேடுகளை தொகுத்து பல்கலைக்கழக தில்லுமுல்லுகள் என்ற நூலை தயார் செய்துள்ளனர்.

தொடர்ந்து, இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர். அதன்படி, நேற்று திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாக நுழைவு வாயிலில் சங்கத்தின் கவுரவ தலைவர் இளங்கோவன் தலைமையில் சங்க நிர்வாகிகள் சிதம்பரம், ரவிசங்கர் மற்றும் ஆசிரியர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் திரண்டு நூலை வெளியிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருவலம் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் அனுமதி இன்றி பல்கலைக்கழக வளாக நுழைவு வாயில் பகுதியில் நூலை வெளியிட கூடாது எனக்கூறி தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பெற்ற பிறகு நூலை வெளியிடும்படி அறிவுறுத்தி கலைந்து செல்ல செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் பரபரப்பு நிலவியது.

The post முறைகேடுகளை தொகுத்து நூலாக வெளியிட்ட பணியாளர்கள் போலீசார் தடுத்து நிறுத்தினர் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்த appeared first on Dinakaran.

Tags : Thiruvalam ,Vellore Thiruvalluvar University ,Thiruvalam, Vellore ,Vellore Tiruvalluvar University ,
× RELATED ஊராட்சி செயலாளர் வீட்டில் விஜிலென்ஸ்...