துனிஷ்: வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள துனிஷியா நாட்டின் தலைநகர் துனிசில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இங்கு நேற்று காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 தற்கொலை படை தீவிரவாதிகள், அமெரிக்க தூதரகத்தில் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் உடல் சிதறி பலியாகினர். அவர்களை தடுக்க முயன்ற 5 போலீசார் மற்றும் அவ்வழியே சென்ற ஒருவர் என 6 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.