×

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 100 சதவீதம் வரை முதலீடு செய்ய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 100 சதவீதம் அளவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய அனுமதி அளிப்பது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நஷ்டத்தை சந்தித்து வரும் ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பது என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், அந்த நிறுவனத்தில் 100 சதவீதம் வரை முதலீடு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியர்களை அனுமதிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.  தற்போதுள்ள விதிமுறைப்படி ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை 49 சதவீதம் அளவுக்கே வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெறமுடியும். மேலும் 49 சதவீத பங்குகளில் அந்திய நேரடி முதலீடு மூலம் பெறலாம்.

இது தவிர, தற்போதுள்ள 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக ஒருங்கிணைக்கும் திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்துக்கு பின் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், ‘`வங்கிகளை ஒருங்கிணைக்கும் முடிவு அந்தந்த வங்கி போர்டு எடுத்த முடிவுப்படியே மேற்கொள்ளப்படுகிறது. இந்திய வங்கிகளை உலகளாவிய வங்கிகளாக மாற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் இந்த வங்கிகளுடன் அரசு தொடர்ந்து தொடர்பில் இருக்கும். வங்கிகள் ஒருங்கிணைப்பால் வங்கிகள் செயல்பாட்டில் எந்த பாதிப்பு இருக்காது,’’ என்றார்.  இதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் இணைக்கப்படும். கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி இணைக்கப்படும்.

இது தவிர, கம்பெனிகள் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2013ம் ஆண்டு கம்பெனி சட்டத்தில் 72 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தில் உள்ள கூட்டுக் குற்றங்களில் 23 குற்றங்கள் மறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 7 கூட்டுக்குற்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. வர்த்தகத்தை எளிதாக செய்யும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Air India ,Indians ,NRIs ,meeting ,Cabinet , Air India flight, investment, overseas Indians, Union Cabinet meeting
× RELATED விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8...