சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும் சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று 4வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கடந்த 14ம்தேதி போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீஸ் தடியடி நடத்தியதில் பலர் படுகாயமடைந்தனர். இதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் 4வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர், இந்த பிரச்னையை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். போராட்ட பகுதியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கானா பாடல் பாடப்பட்டது. இதனிடையே, மாகாத்மா காந்தியின் பேரன் துஷார்காந்தி போராட்டத்தில் கலந்துகொண்டு முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினார். இந்த சம்பவத்தால் வண்ணாரப்பேட்டை பகுதியில் 4வது நாளாக பதற்றம் நிலவுகிறது. மண்ணடியில் ஆர்ப்பாட்டம்: பாரிமுனை மண்ணடி தெருவில் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ‘’குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும், முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க வடக்கு கடற்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராயபுரம், தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தவித்தனர்.
போராட்ட களத்தில் திருமணம்
வண்ணாரப்பேட்டை லாலா குண்டா பகுதியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் நேற்று, திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த ஷாஹின்ஷா- சுமையா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக நேற்று காலை நடக்கவிருந்த அவர்களது திருமணத்தை தள்ளிவைத்திருந்தனர். இந்த நிலையில், இந்த விஷயம் போராட்ட களத்தில் உள்ளவர்களுக்கு தெரியவந்ததும் பரபரப்பு நிலவியது. உடனடியாக அவர்களது திருமணத்தை நடத்திவைக்க முடிவு செய்து, போராட்ட களத்திலேயே ஷயின்ஷா, சுமையா ஆகியோரின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து போராட்ட களத்தில் வாழ்த்து மழையில் நனைந்தனர். பரிசு பொருட்களும் வழங்கினர்.