×

போலீசார் தாக்குதலில் படுகாயமடைந்த ஜமியா மாணவர் இழப்பீடு கோரி வழக்கு : டெல்லி போலீசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி:  குடியுரிமை எதிர்ப்பு (திருத்தம்) சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த ஜமியா மிலியா பல்கலை மாணவர் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க மத்திய, டெல்லி மாநில அரசுகள் மற்றும் டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக(சிஏஏ) கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஜமியா மிலியா பல்கலை கழகம் அருகே போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து  போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து போலீசார் தடி யடி நடத்தினர். இதனால் ஜமியா பல்கலைக்குளு ஓடி சிலர் பதுங்கினர். அவர்களை துரத்தி பிடிப்பதற்காக பல்கலை வளாகத்தினுள் சென்ற போலீசார், அங்குள்ள லைப்ரரி அறையில் புகுந்து படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீதும் சரமாரி தாக்குதல் நடத்தினர்.

இதில், மின்ஹாஜுதீன்   என்ற மாணவரின் ஒரு கண்பார்வை பறிபோனது. அவர் ஏற்கனவே இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஷயான் முஜீப் என்ற மற்றொரு மாணவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவரது அந்த மனுவில், ஜமியா பல்கலை நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த என்மீது போலீசார் நடத்திய தாக்குதலில் எனது இரு கால்கள் முறிந்துவிட்டன. இதுவரை 2 லட்சம் செலவு செய்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளேன். மேற்கொண்டு என்னால் செலவிட முடியவில்லை. எனவே, இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மாணவரின் இந்த மனுவை விசாரித்த  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என் படேல் மற்றும் நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மத்திய அரசு, ஆம் ஆத்மி அரசு மற்றும் டெல்லி போலீசார் தங்களது நிலைபாட்டை தெரிவிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


Tags : student ,police officer , Jamia student seeking compensation,assaulting cop,Delhi court issues notice , Delhi police
× RELATED பெற்றோர்களுக்கும்...