×

மலைக்கோயிலில் இரவிலும் தங்கலாம் ‘எடப்பாடிக்கு’ பழநியில் முக்கியத்துவம் தருவது ஏன்?...350 ஆண்டாக தொடரும் பாரம்பரியம்

பழநி: முருகக்கடவுளை மருமகன் என்று உறவு பாராட்டும் எடப்பாடி பக்தர்களுக்கு மட்டுமே பழநி கோயிலில் இரவில் தங்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் தைப்பூசத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, கோவை, காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி,  நாகர்கோவில், திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பல்வேறு குழுக்களாக பாதயாத்திரையாக பழநி கோயிலுக்கு வருவது வழக்கம். சேலம் மாவட்டம், இடைப்பாடி எனப்படும் எடப்பாடி ஸ்ரீ பருவதராஜகுல மக்கள் சுமார் 350 ஆண்டுகளுக்கு மேலாக பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இக்குழுவினர் எப்போதும் தைப்பூசத் திருவிழா முடிவடைந்த பின்னரே பழநி கோயிலுக்கு வருவர். இவர்களுக்கு மட்டுமே மலைக்கோயிலில் இரவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களது வழிபாட்டு முறைகள், விரத முறைகளில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் நிறைந்துள்ளன.

இதுகுறித்து பழநியாண்டவர் கல்லூரியின் துறைத்தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். வழிபாட்டு முறைகள் அவர் கூறியதாவது, முருகனின் சமேதரரான வள்ளி தங்கள் குலத்தில் பிறந்தவள். வள்ளியை திருமணம் செய்து கொண்டதால் முருகன் எங்களது மருமகன். இதனால் எங்கள் மருமகனுக்கு வருடந்தோறும் தைப்பூசம் முடிந்ததும் சீர் கொண்டு வருகிறோம் என்று உரிமையுடன் எடப்பாடி பக்தர்கள் கூறுகின்றனர். பழநி கோயிலில் தைப்பூசத்திற்கான கொடி ஏற்றப்பட்டதும், எடப்பாடி பகுதி கிராம மக்கள் பாதயாத்திரைக்கான கங்கணம் கட்டி விரதத்தைத் துவங்கி விடுவர். சிறுவர் முதல் பெரியவர் வரை :  சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பாலின பேதமின்றி ஒட்டு மொத்த கிராம மக்களும் விரதமிருப்பர். பழநி முருகனை தரிசித்த பிறகு, வீட்டிற்கு சேர்ந்ததும் படையலிட்ட பிறகே அவர்களது விரதம் நிறைவேறும். இடைப்பட்ட நாட்களில் முருகனுக்கு படையல் போடுவதற்கு முன்பு தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பக்தியுடன் விரதமிருந்து தங்கள் ‘மருமகனை’ வழிபடுகின்றனர் எடப்பாடி மக்கள்.

பழநிக்கான பாதயாத்திரைக்கு முன்பு எடப்பாடி கிராமமே விழாக்கோலம் பூண்டு விடும். பழநி முருகன் கோயில் போன்றே மாதிரி கோயில் உருவாக்கி தைப்பூசத்தன்று பழநி கோயிலில் நடைபெறும் பூஜைகளை அங்கேயும் செய்வார்கள். எடப்பாடியில் பூஜை செய்யும்போது, பழநியில் இருக்கும் முருகன் எடப்பாடிக்கும் வந்து விடுவதாக நம்பி வருகின்றனர். தங்களது பாதயாத்திரையின்போது முருகனும் தங்களுடனேயே வருவது போல் நினைக்கின்றனர். காவடியாம் காவடி...:      ஆயிரக்கணக்கான எடப்பாடி பக்தர்கள் சக்கரைக்காவடி, இளநீர்க்காவடி, கரும்புக்காவடி, தீர்த்தக்காவடி என்று விதவிதமான காவடிகள் எடுத்து கொண்டாட்டத்துடன் பழநியை நோக்கி தங்களது பாதயாத்திரையை துவங்குவர். எடப்பாடி பக்தர்கள் தங்களது காவடிகளை அலங்கரிக்க பனாங்கு என்ற கைவேலைப்பாடுகள் நிறைந்த பட்டுத்துணியைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் சில மச்சக்காவடியும் எடுத்து வருவர். முருகனின் உத்தரவு யாருக்கு கிடைக்கிறதோ, அவர்களால் மட்டுமே மச்சக்காவடி எடுக்க முடியுமென்று நம்புகின்றனர்.

கோலாட்டம் ஆடி...: காவடி எடுக்காத இதர பக்தர்கள் முருகனின் பாடல்களை பாடி கோலாட்டம் ஆடி வருவர். இவர்களது ஆட்டங்களில் நாலாம் நாடி, எட்டாம் நாடி, சென்னிமலை கொட்டு போன்ற வித்தியாசமான வாத்தியக்கருவிகள் இடம்பெறும். எடப்பாடி பக்தர்களின் தனிச்சிறப்பான குடையாட்டமும் குறைவின்றி நடைபெறும். பாதயாத்திரையாக வரும் எடப்பாடி பக்தர்கள் வரும் வழி நெடுகிலும் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருவர். தொடர்ந்து பழநியை அடைந்ததும் சண்முகநதியில் நீராடி, நகர்பகுதிகளிலும் ஊர்வலமாக வருவர். தொடர்ந்து படி பூஜை, மலர் வழிபாடு, விபூதி படைத்தல் போன்ற சிறப்பு வழிபாடுகளை செய்வர்.

பூக்களால் வழிபாடு

எடப்பாடி பக்தர்கள் மலைக்கோயிலில் தீப ஸ்தம்பம் அருகில் வருடந்தோறும் பல்வேறு வகையான பூக்களைக் கொண்டு சரவணபவ ஓம் வடிவம் வரைவர். பின், இதற்கு தீபாராதனை செய்து சிறப்பு வழிபாடு நடத்துவர்.

பல திரவியங்களால் படி வழிபாடு பூஜை

எடப்பாடியை சேர்ந்த படித்திருவிழாக்குழு பொருளாளர் வெங்கடேஷ் ராஜ் கூறுகையில், ‘‘பழநி மலைக்கோயிலுக்கு செல்ல சுமார் 650 படிகள் உள்ளன. இப்படிகளில் மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், வாசனை திரவிய பொருட்கள் கலந்த கலவைகளை பூசி குங்குமம் வைப்பர். தொடர்ந்து வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், எலுமிச்சை, ஊதுபத்தி, கற்பூரம், பூ மலர்கள், விபூதி பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்வர். தொடர்ந்து ஒவ்வொரு படிகளின் ஓரத்திலும் எடப்பாடி கிராம மக்கள் நின்று படி வழிபாடுகளில் ஈடுபடுவர்.

Tags : temple ,hill station ,Palani , Mountain Temple, Edappadi, Palani, Tradition
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை