×

குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் பொதுமக்கள் சாலை மறியல்

துறையூர்: துறையூர் நகராட்சியில் உள்ள 1 மற்றும் 2வது வார்டிற்கு கடந்த 20 நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். துறையூர்ர் நகராட்சியில் உள்ள 1 மற்றும் 2வது வார்டுக்கு உட்பட்டது மேட்டுத் தெரு. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 தினங்களாக தங்கள் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். துறையூர்ர் நகராட்சிக்கு முசிறியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. துறையூரில் உள்ள 24 வார்டுகளுக்கும் நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 1 மற்றும் 2வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 20 நாட்களாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து துறையூர்-ஆத்தூர் மெயின் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 20 நாட்களாக முறையாக குடிநீர் மற்றும் உப்புநீர் வழங்கப்படாததால் குறித்த நேரத்திற்கு பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும், முதியவர்கள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் 10 தினங்களுக்கு முன்பு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம் என்றனர். இந்த சாலை மறியலால் துறையூர்-ஆத்தூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதிஅளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் நடந்த இடத்திற்கு நகராட்சி நிர்வாகத்தினர் யாரும் வராததால் இப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர்.

Tags : women , Condemning the inadequate supply of drinking water Women with calves Public road picket
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது