×

மெரினா மீன் கடைகள் கணக்கெடுப்பின்போது அதிகாரிகள் - மீனவர்கள் திடீர் வாக்குவாதம்

சென்னை: மெரினா பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன்கடைகளை கணக்கெடுக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ேநற்று ஈடுபட்ட போது மீனவர்ளுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பானது. மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் லூப் சாலை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி மெரினா கடற்கரையில் உள்ள கடைகள் விரைவில் சீரமைக்கப்பட உள்ளன. மெரினா கடற்கரையில் உள்ள 1300 வியாபாரிகள் அடையாள அட்டை பெற்று இருக்கும் நிலையில் 900 பேருக்கு மட்டும் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மெரினா கடற்கரை தொடர்பான வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்துபோது மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என்றும்,  லூப் சாலையில் உள்ள மீன்கடைகளை அகற்றி அவற்றை சீரமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் அவர்களுக்கு தனி மீன்மார்க்கெட் கட்டித் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் லூப் சாலையில் உள்ள மீன்கடைகளை கணக்கெடுக்கும் பணியில் சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டல அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். அப்போது காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் கடைகளை கணக்கெடுத்தனர். இதை பார்த்த மீனவர்கள் எந்த தகவலும் இல்லாமல் எப்படி கணக்கெடுக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். மேலும் திடீரென்று கணக்கெடுப்பு நடத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையும் மீறி காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கடையின் முன்பும் சிலோட்டில் வரிசை எண் எழுதி வைத்து அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கு கடை வைத்திருப்பவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கணக்கெடுப்பு பணியை சில நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கணக்கெடுக்காமல் திரும்பி சென்று விட்டனர். இதனால் லூப் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : fishermen ,marina fish shops survey ,fish shops , Authorities - fishermen argue,marina fish shops survey
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...