×

பாலியல் குற்றங்களுக்காக அதிகளவில் தூக்கு தண்டனை வழங்கிய மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடம்: 12து இடத்தில் தமிழகம்!

புதுடெல்லி: பாலியல் குற்றங்களுக்காக அதிகளவில் தூக்கு தண்டனை வழங்கிய மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம், இந்தியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. டெத் பெனால்டி இன் இந்தியா 2019 என பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், 1947ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, பெரும்பான்மையான மரணதண்டனைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுதந்திரத்திற்குப் பிறகு உத்தரபிரதேசம் 354 பேரை தூக்கிலிட்டுள்ளது.

அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் 90 பேரை ஹரியானாவும், 73 பேரை மத்தியப் பிரதேச மாநிலமும் தூக்கிலிட்டுள்ளன. மேலும், இந்தியாவில் அபூர்வமான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது, இது கொலை, பயங்கரவாதம், கடத்திக் கொலை, போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு தொடர்பான கொலை உள்ளிட்ட பல  சட்டங்களின் கீழ் நீதிமன்றங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த அறிக்கையில், இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்த விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, 2019ம் ஆண்டு நடந்த பாலியல் குற்றங்களுக்கு பாதிக்கு(52.94%) மேல் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களுக்காக அதிகளவில் தூக்கு தண்டனை வழங்கிய மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 2019ல் ராஜஸ்தானில் 102 தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. தூக்கு தண்டனை வழங்கப்படாத மாநிலங்களில் அருணாச்சல பிரேசம், கோவா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இந்த பட்டியலில் தமிழகம் 12வது இடத்தில் உள்ளது.

2019ல் நடந்த பாலியல் குற்றங்களுக்கு தமிழகத்தில் 4 தூக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்த குற்றங்கள் 2016ல் 18 சதவீதமாக இருந்த நிலையில், 2019ல் 52.94 சதவீதமாக அதிகரித்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு டெல்லியல் நடந்த நிர்பயா பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு இதுவரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவில்லை. இருப்பினும் இச்சம்பவத்திற்கு பிறகு பாலியல் குற்றங்களுக்கான சட்டத்தில், குறிப்பாக போக்சோ சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Rajasthan ,states ,executions , Sexual Offenses, Hanging, Delhi Law University
× RELATED பீகார், ராஜஸ்தானில் நீட் வினாத்தாள்...