×

ஐகோர்ட் கிளை உத்தரவை தொடர்ந்து தேனி ஆவின் நிர்வாக இடைக்கால தலைவராக ஓ.ராஜா பொறுப்பேற்பு : நீக்கப்பட்ட 17 பேரே மீண்டும் தேர்வு

தேனி: தேனி ஆவின் நிர்வாக இடைக்கால தலைவராக ஓ.ராஜா மற்றும் துணைத்தலைவர், உறுப்பினர்கள் உட்பட 17 பேர் பொறுப்பேற்றனர். ஐகோர்ட் கிளை உத்தரவால், நீக்கப்பட்ட 17 பேரே மீண்டும் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், முறையான முன்னறிவிப்பு எதுவுமின்றி தலைவராக ஓ.ராஜா மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி, அவர்களது நியமனத்தை ரத்து செய்யக்கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, ‘‘ஆவின் விதிப்படி, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாததால், தேனி மாவட்ட ஆவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் ரத்து செய்யப்படுகிறது. ஆவின் ஆணையர் விதிகளை பின்பற்றி தற்காலிக குழுவையோ, நிரந்தர குழுவையோ அமைப்பது குறித்து முடிவு செய்யலாம்’’ என உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து ஆவின் ஆணையர் உத்தரவுப்படி, தேனி ஆவின் நிர்வாகத்தில் இடைக்கால குழுவினர் நேற்று பொறுப்பேற்றனர். இடைக்கால தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, துணைத்தலைவராக செல்லமுத்து மற்றும் 15 உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஐகோர்ட் கிளை உத்தரவை தொடர்ந்து. ஏற்கனவே தேனி ஆவின் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா உள்ளிட்ட 17 பேரே மீண்டும் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் புதிய நிர்வாகக்குழு ராஜேந்திர பாலாஜி பேட்டி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:

கேரளாவிற்கு தனியார் பால் தாமதமாக கொண்டு செல்லப்பட்டதால் கெட்டுப்போய் விட்டது. அதனை கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப அனுப்பி விட்டனர். ஆவின் பால் மீது இதுவரை எந்த புகாரும் வந்தது இல்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களுக்கும் ஆவின் பால் அனுப்பி வைக்கப்படுகிறது. பால் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால் தான் ஆவின் பால் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தற்போது தனியாரும் கொள்முதல் விலை விற்பனை விலையை உயர்த்தி உள்ளனர். ஆவின் பால் விலையை மீண்டும் உயர்த்தும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை. ஐகோர்ட் மதுரை கிளை வழங்கி உள்ள தீர்ப்பில், தேனி மாவட்டத்தில் இடைக்கால நிர்வாகக்குழு அமைக்க பால்வளத்துறை கமிஷனருக்கு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி சட்டரீதியான ஒப்புதல்களை பெற்ற பின்பே அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் முறைப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டு புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : O. Raja ,president ,Theni Awa ,ICC , O. Raja ,interim chairman , Theni Awin
× RELATED ஈரான் அதிபர் மரணம்.. மோசமான வானிலையே...