×

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரிய நிர்பயா குற்றவாளி அக்ஷ்ய்குமாரின் மறுசீராய்வு மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

புதுடெல்லி: தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரிய நிர்பயா குற்றவாளி அக்ஷ்ய்குமாரின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்(32), தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.

முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி கடந்த 17ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங், தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், அக்‌ஷய் குமார் அளித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வரும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Akshay Kumar ,Supreme Court ,SC ,Akshay Kumar Singh , SC,Nirbhaya case,Akshay Kumar Singh,curative plea
× RELATED கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்