×

பல லட்சம் வாகனங்கள் பயணிக்கும் பழமையான பாலங்கள் பலமிழந்து வரும் அவலம்

* மதுரையில் வாகன ஓட்டிகள், மக்கள் அச்சம்
* மராமத்து பணிகளை துரிதப்படுத்த கோரிக்கை

மதுரை: மதுரையில் பல லட்சம் மக்கள் பயணிக்கும் பழமையான பாலங்கள் பலமிழந்து வரும் அவலம் நிலவுகிறது. இதனால் அச்சப்படும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மராமத்து பணிகளை துரிதபடுத்த கோரி வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக கொண்டு உருவான மதுரை மாநகரின் எல்லை 148 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்து பரந்துள்ளது. 9 ஆயிரம் வீதிகள், தெருக்களில் நிறைந்துள்ளன. 1,572 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் உள்ளன. மக்கள் தொகை 20 லட்சத்தை எட்டியது. வாகனங்களின் எண்ணிக்கை புற்றீசலாக பெருகி கொண்டே போகிறது.  மாநகரின் வீதிகளில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க மேம்பாலங்கள் அத்தியாவசியமாகிறது. ஒரு நாளில் பல லட்சம் வாகனங்கள் செல்லும் முக்கிய இடங்களில் அமைந்துள்ள பாலங்கள் பழமையானது. அந்த பாலங்கள் பராமரிப்பின்றி பாழ்பட்டு வருகிறது.

* பெரியார் பஸ்ஸ்டாண்ட் அருகே திருப்பரங்குன்றம் பிரதான சாலையில் ரயில் பாதையின்  குறுக்கே சுப்பிரமணியபுரத்தில் மேயர் முத்து மேம்பாலம் 1971ல் கட்டப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு பாலத்தின் பலம்  பரிசோதிக்கப்பட்டு தேவையான பராமரிப்பு பணிகள் நடைபெறாமல்  அலட்சியப்படுத்தப்பட்டன. குறிப்பாக பாலத்தின் அடிபகுதியிலும், தூண்களிலும்  செடிகள் முளைத்து விரிசல், சிதைவுகள் ஏற்பட்டும், சிமென்ட் கான்கிரீட்கள்  உடைந்து விழுந்தும், அதை சீர்செய்து பலப்படுத்தும் பணி நடைபெறவில்லை.  இதனால்  பாலம் பலத்தை இழந்துள்ளது. இதன் விளைவு கனரக வாகனங்கள் சென்றால்  அதிர்வு ஏற்படுகிறது.உச்சகட்டமாக தற்போது அந்த பாலத்தில் 10 டன் எடைக்கு அதிகமான வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 டன்னுக்கு குறைவான பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் 30 கி.மீ.  வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதே நிலை நீடித்தால் பாலத்தில் எந்த வாகனமும் செல்ல  முடியாத நிலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

* தெற்கு வாசல் ரயில்வே மேம்பாலமும் பராமரிப்பின்றி பலம் இழந்து வருகிறது.  நெடுஞ்சாலை துறையின் அலட்சியம் நீடித்தால், சுப்பிரமணியபுரம் பாலத்தின் கதி  தெற்குவாசல் மேம்பாலத்திற்கும் ஏற்படும் அபாயம் எதிர்நோக்கி உள்ளது.
* பைபாஸ் சாலையில் ஆண்டாள்புரம் சந்திப்பில் போடி ரயில் பாதையின் குறுக்கே அமைந்துள்ள மேம்பாலம் சிதைந்து வலுவிழந்து கொண்டே போகிறது.
* மதுரை கோட்ஸ் அருகே ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே அமைந்துள்ள பாலம் கட்டி 20 ஆண்டுகளாகிறது. பராமரிப்பின்றி பாலம் பலம் இழக்கிறது. இதில் வாகனங்கள் செல்ல முடியாத அளவு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
* வைகை ஆற்றின் குறுக்கே மதுரை நகரின் தென் பகுதி, வட பகுதியை இணைக்க முதன்முதலில்  1889ல் நெல்பேட்டைக்கும், கோரிப்பாளையத்திற்கும் இடையே மேம்பாலம் கட்டப்பட்டது. இது 1886ல் ஆங்கிலேயர் ஆட்சியில் பாலத்தை கட்டிய ஆல்பர்ட் விக்டர் பெயரே “ஏ.வி. மேம்பாலம்“ என சூட்டப்பட்டது. இதற்கான ஆயுள் 100 ஆண்டுகள் என்றும் அதன்பிறகு பாலத்தை பலப்படுத்தி தொடர்ந்து பராமரித்துக் கொள்ள வேண்டும் என்றும் விதிமுறைகள் அளிக்கப்பட்டன.   

கடந்த 2000ம் ஆண்டு இதன் அருகிலேயே கல்பாலத்தின் மேல் மேம்பாலம் யானைக்கல் செல்லூர் இடையே கட்டப்பட்டது. இதன் பிறகு ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தில் சிறிது பராமரிப்பு பணி மட்டும் மேற்கொண்டு, ஒரு வழிப்பாதையாக போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது போக்குவரத்து அதிகரித்துள்ளது. பாலத்தின் வயது 132 ஆகி அதன் ஆயுள் முடிந்து அதன் ஸ்திரத்தன்மையை இழந்துள்ளது. பாலத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள வளைவுகளில் கீறல் மற்றும் சிதைவுகள் ஏற்பட்டுள்ளன. பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களின் அடித்தளத்திலும் சேதங்கள் காணப்படுகின்றன. இதன் விளைவாக பாலத்தின் மேல் கனரக வாகனங்கள் கடந்து செல்லும்போது, அதிர்வுகள் ஏற்படுகிறது. பாலத்தின் கீழ் நிற்கும்போது அதிர்வை உணர முடிகிறது. இதை பாலத்துக்கு நேரும் ஆபத்தை உணர்த்தும் அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே பாலத்தை நவீன கருவிகள் மூலம் பரிசோதித்து ஆபத்து நேராமல் காக்க பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கட்டிட பொறியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசு அலட்சியம் காட்டுகிறது.
இம்மாதிரி பராமரிப்பின்றி பலம் இழந்த பாலங்களின் மேற்பகுதியில் விரிசலும் பள்ளங்களும் பல்லை காட்டுவதால், அதில் செல்லும் வாகன ஓட்டிகளையும், மக்களையும் நடுங்க வைக்கிறது. வாகனங்களை உலுக்கி எடுக்கிறது. குறிப்பாக டூவீலரில் பெண்கள், குழந்தையுடன் செல்வோரை கண் இமைக்கும் நேரத்தில் கீழே சாய்க்கின்றன.
* சமூக ஆர்வலர் நீதிராஜன் கூறும்போது, “பழமையான பாலங்களை பராமரித்து காக்க அரசு தவறினால், மோசமான விளைவுகள் ஏற்படும். இந்த பாலங்கள் இல்லாத மதுரையை நினைத்து பார்த்து அரசு துரிமான முடிவுகள் எடுக்க வேண்டும். வைகையாற்றில் தடுப்பணை கட்டியதற்குப்பதில் ஒரு பாலத்தைக் கட்டி இருக்கலாம்” என்றார்.

புதிய பாலத்திட்டம் அவுட்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பஸ்ஸ்டாண்டை ரூ.160 கோடியில் மறு சீரமைக்கும் பணி நடக்கிறது. இதன் நடுவில் கட்டபொம்மன் சிலை முதல் திடீர்நகர் வரையிலான சாலை மேம்பாலம் கட்டும் திட்டம் உருவாகி கைவிடப்பட்டுள்ளது. இதனால் மறு சீரமைப்பு பணி முடிந்தாலும் நெருக்கடியே நீடிக்கும். தற்போது சுப்பிரமணியபுரம் பாலம் வலு இழந்துள்ள நிலையில் அடுத்து என்னாகும்? என்பது பெரும் கேள்விக்குறியே?

எம்.எல்.ஏ. சொல்வது என்ன?
 மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் கூறும்போது, “ மதுரை நெருக்கடிக்கு தீர்வு காண தேவையான இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்படவில்லை. பழமையான பாலங்களை காக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் உருவாக்கப்படவில்லை” என்றார்.

தேவர் சிலை சந்திப்பில் பாலம்
கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பில் ஒரு நாளில் 4 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. இதில் உயர்மட்ட பாலம் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒரு பகுதி வைகை ஆற்றின் ஏ.வி. மேம்பாலத்தில் இணைக்கப்படுகிறது. ஆனால் அந்த பழமையான அந்த பாலத்தை பலப்படுத்தும் திட்டம் தயாராகவில்லை என்பது வேதனைக்குரியது.

கல்பாலத்தை முழ்கடிக்கும் தடுப்பணை
வைகை ஆற்றில் யானைக்கல் செல்லூர் இடையே அமைந்துள்ள கல்பாலம் கோட்டைச்சுவரை இடித்த கற்களைக் கொண்டு, 1840ல் இருந்த பிளாக்பர்ன் என்பவர் கட்டினார். இது தரை மட்டபாலமாகும். பாலத்தின் கீழ் அமைந்துள்ள ராட்சத குழாய் வழியாக தண்ணீர் ஓடும். மேல்பகுதியில் வாகனங்கள் செல்லும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாலத்தை மூழ்கடித்து ஓடும். 180 ஆண்டுகளாக வெள்ளத்தை தாங்கி இன்றைக்கும் கல்பாலம் கரையாமல் கலங்காமல் அப்படியே ஆயிரம் யானை பலத்துடன் உள்ளது. இதில் தூண்கள் எழுப்பி மேம்பாலம் கட்டினாலும் கல்பாலம் அப்படியே நீடிக்கிறது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கல்பாலத்தின் அருகே வைகை ஆற்றில் தடுப்பணை கட்டியதால், ஆற்றில் தண்ணீர் திறந்தால் கல்பாலத்தை மூழ்கடிக்கிறது

பறக்கும் பாலம்...
மதுரை நத்தம் சாலையில் 7 கி.மீ. நீளம் பறக்கும் பாலம் கட்டி முடிக்கும் பணி இன்னும் ஓராண்டுக்கு மேலாகும். இந்த பாலம் இப்போதைக்கு மதுரை நகரின் நெருக்கடிக்கு தீர்வாக அமைய வாய்ப்பில்லை.

அரசுக்கு பரிந்துரை
* நெடுஞ்சாலை துறை பொறியாளர் கூறும்போது, “பழமையான பாலங்களை பராமரிப்புக்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
* மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறும்போது, “குருவிகாரன் சாலையில் மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் பணி தொடங்கும், மேலமடை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் திட்டம் தயாராக உள்ளது” என்றார்.

Tags : bridges ,millions , Madurai, the oldest bridges
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...