×

புத்தாண்டுக்கு தயாராகும் கன்னியாகுமரி: அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். இதற்கிடையே தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு சீசன் காலம் என்று இல்லாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பல்வேறு உலக நாடுகளில் இருந்து ஏராளமானோர் வருவதை பார்க்க முடிகிறது. வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரியில் மிக பிரமாண்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜிகளில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் அரங்கேறுவது வழக்கம். இந்த கொண்டாட்டங்களில் பெரும்பாலும் வெளிநாட்டினரே பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக கன்னியாகுமரியில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், லாட்ஜிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதும் வழக்கம். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னதாகவே அறைகள் புக் செய்து விடுவது குறிப்பிடத்தக்கது.

தங்கும் விடுதிகள், லாட்ஜிகளில் ஆடல் பாடலுடன் தொடங்கும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தற்போது போதிய வரவேற்பு இல்லாமல் போய்விட்டதாகவே தெரிகிறது. ஆகவே தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை கடற்கரை பகுதியில் கொண்டாடவே வெளிநாட்டினர் விரும்புகின்றனர். இதை நிருபிக்கும் வகையில் கடந்த புத்தாண்டையொட்டி கடற்கரையில் திரண்டவர்களின் கூட்டம் பல மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே சென்னை மெரினா பீச்சுக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறி, ஆண்டின் முதல் சூரிய உதயத்தை கண்டு களிப்பதையே சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவது தெரியவந்துள்ளது. இதனால் ஆண்டுக்காண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் நட்சத்திர ஓட்டல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதை நிருபிக்கும் வகையில் இந்த ஆண்டு 2 ஓட்டல்களில் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்பது தெரியவருகிறது.

ஆகவே இந்த முறை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக குவியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் டிஎஸ்பி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.இது தொடர்பாக போலீசார் கூறியது: கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மது அருந்திவிட்டு வாகனங்களில் செல்லக் கூடாது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது. பொது மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வரும் அனைவரும் சுய கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும். அமைதியான முறையில் ஜாலியாக புத்தாண்டை கொண்டாடி மகிழலாம் என்றனர்.

சுற்றுலா பயணிகள் தவிப்பு

கன்னியாகுமரியில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக வெளிநாடுகள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக வரத் தொடங்கி உள்ளனர். தற்போது இங்குள்ள தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜிகளில் அறைகள் அதிக அளவிலான அறைகள் புக்காகி விட்டன. 100க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் இருந்தும் சுற்றுலா பயணிகள் பலர் அறைகள் கிடைக்காமல் அலைந்து திரிகின்றனர். இந்த ஆண்டின் கடைசி நாள் நாளை 31ம் தேதி ஆகும். ஆகவே 2019ம் ஆண்டின் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வமுடன் உள்ளனர். இதேபோல் இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை காணவும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

Tags : Kanyakumari ,rooms , New Year
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...