×

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து வைகையாற்றை பாதுகாக்க வேண்டும்

*அதிகாரிகள் அதிரடி காட்டுவார்களா?

பரமக்குடி :  பரமக்குடி வைகை ஆற்றில் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி உள்ளது. அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிககை எடுக்க  வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. பரமக்குடி வைகை ஆறானது பரமக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவையை போக்கும் ஜீவநதியாக உள்ளது. ஆற்றின் வைகை நகர் பகுதியில், ஓட்டல்களுக்கு வியாபாரம் செய்வதற்காக கரி மூட்டைகளையும், ஆடு, மாடுகளையும் கட்டி வைத்து ஆக்கிரமித்து வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் ஆற்றில் மணல் கடத்தப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கோட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள வைகை ஆற்றங்கரை பகுதியை சிலர் ஆக்கிரமித்து, அதிகாரிகள் துணையோடு விற்பனை செய்து விட்டனர். தற்போது காட்டுபரமக்குடி அரசு மருத்துவமனை எதிரே, வைகையாற்றின் கரையோரத்திலிருந்து காட்டுபரமக்குடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிவரை, கரையோரத்தில் உள்ள வைகையாற்றில் தடுப்புச்சுவர் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வைகை கரையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்பவர்களை தடுத்து, வைகை ஆற்றை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பரமக்குடியை சேர்ந்த  குமார் கூறுகையில், “பரமக்குடி வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன. சர்வீஸ் சாலை அமைத்தபோது ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதன்பின் சாலையை கடந்து ஆற்றின் உள்பகுதியில் மணல் கொட்டி வைப்பது, கிணறு அமைத்து குடிநீரை விற்பனை செய்வது, கிணற்று உறை தயாரிப்பு, மரக்கரி விற்பனை தொழில் என பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுபோக வைகையாற்றின் உள்பகுதியில் பட்டா நிலம் எனக்கூறி பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதே நிலை நீடித்தால் வைகையாறு நாளடைவில் சுருங்கி குட்டையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசின் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : occupants , Paramakudi,Vaigai ,occupants ,officials
× RELATED சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக...