×

ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு ஜன. 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: அறிவியல் நகரம் அறிவிப்பு

சென்னை: ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு 2020 ஜனவரி 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை, அறிவியல் நகரம் அறிவித்துள்ளது. அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் சகாயம் வெளியிட்ட அறிவிப்பு: கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டுவரும் விதம் மற்றும் அவர்களை கெளரவிக்கும் விதத்தில் இரு சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசு தொகையை அறிவியல் நகரத்தின் மூலமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஊரக பகுதியை சேர்ந்தவராக இருப்பதோடு அவர்கள் மரபு வழியான தொழில்நுட்ப அறிவாற்றலோடும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். ஊரகம் என்பது ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளை குறிக்கும். இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு பொருந்தாது. விண்ணப்பதாரரின் கண்டுபிடிப்பிற்கான ஆவணங்கள், சான்றிதழ்கள், புகைப்படங்கள், வரிசை விளக்க வரைபடம், சோதனை அறிக்கைகள் மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்த இதர ஆவணங்களுடன் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்ட அசல் விண்ணப்பப்படிவத்தை அறிவியல் நகரத்திற்கு அனுப்ப வேண்டும்.

மாதிரி விண்ணப்பப் படிவத்தை அறிவியல் நகர www.sciencecitychennai.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் அவருடைய கண்டுபிடிப்பு வேறு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அதற்காக விருது பெற்றிருந்தாலோ அதை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். இதேபோல் இதர தகவல்களையும் தெரிவிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் விண்ணப்பதாரரின் கண்டுபிடிப்பு, செயல்படும் மாதிரி குறித்து அனுப்ப வேண்டும்.  நிறுவனங்களில் பணியாற்றும் விண்ணப்பதாரர்கள் அந்த நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்பட்ட தடையின்மை சான்றிதழ் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.

குழுவாக செயல்பட்டு புதிய கண்டுபிடிப்பினை கண்டுபிடித்திருந்தால் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் ஒப்புதல் பெற்று அதனை விண்ணப்ப அசல் படிவத்துடன் இணைக்க வேண்டும். மேற்கண்ட ஆவணங்களுடன் அடங்கிய விண்ணப்பங்களை தத்தமது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக வருகின்ற 10.1.2020க்குள் சென்னையிலுள்ள அறிவியல் நகரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : City of Science Notice ,Jan , Rural Science, Inventor Award, Jan. By 10, apply, City of Science, Notice
× RELATED ஜொமாட்டோவின் 4-வது காலாண்டு லாபம் ரூ.175 கோடி!!