×

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் மே.வங்கத்தில் மீண்டும் ரயில் நிலையம் எரிப்பு : அசாமில் நாளை வரை இன்டர்நெட் ‘கட்’

கொல்கத்தா: குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தில் மக்கள் போராட்டம் தொடர்கிறது. மேற்கு வங்கத்தில் நேற்றும் 2வது நாளாக ரயில் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டது. அசாம் மாநிலத்தில் நாளை வரை இன்டர்நெட் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய ஆயிரக்கணக்கானோர் அசாம், நாகலாந்து, மணிப்பூர், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தில் வசித்து வருகின்றனர். இவர்களில் முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க, மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது, அசாம் ஒப்பந்தத்துக்கு எதிராக உள்ளதாக வடகிழக்கு மாநில மக்கள் போராட்டத்தில் குதித்தனர். மேற்கு வங்கத்தில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கானோர் இந்த மசோதாவால் வெளியேறும் நிலை ஏற்பட்டதால், அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இந்த மாநிலங்களில் போராட்டம், வன்முறை தொடர்ந்து நடக்கிறது.

மேற்கு வங்க மாநிலம், முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்தங்கா ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் தீ வைக்கப்பட்ட நிலையில், ஹவுரா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு கலவரக்காரர்கள் நேற்று தீ வைத்தனர். இதில் ரயில் நிலையத்தின் ஒரு பகுதி பற்றி எரிந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். சங்க் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ரோட்டிலும் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முர்சிதாபாத், வடக்கு 24 பரகனாஸ் மாவட்டங்களில் நேற்று வன்முறை சம்பவங்கள் நடந்தன. ரயில்கள் ரத்து காரணமாக அசாமில் சிக்கியுள்ள பயணிகளுக்காக கவுகாத்தியில் இருந்து திமாபூர், பர்காடிங் போன்ற இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

நாகலாந்தில் 6 மணி நேரம் பந்த்

குடியுரிமை சட்ட திருத்தம் நாகலாந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளது எனக் கூறி, நாகா மாணவர்கள் கூட்டமைப்பு (என்எஸ்எப்) நேற்று காலை 6 மணி முதல் 6 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த பந்த்தை வெற்றிகரமாக நடத்தும்படி மணிப்பூர், அசாமில் உள்ள அமைப்புகளுக்கும் என்எஸ்எப் வேண்டுகோள் விடுத்தது. தேர்வுக்கு செல்லும் மாணவர்கள், சுகாதார பணிக்கு செல்லும் ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், திருமணத்துக்கு செல்பவர்களுக்கு மட்டும் பந்திலிருந்து என்எஸ்எப் விலக்கு அளித்திருந்தது. இந்த பந்த் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ப்டடது.

ஊரடங்கு தளர்வு

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தளர்த்தப்பட்டது. இதனால் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆட்ரோ ரிக்‌ஷா மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள், பஸ்கள் ஓடின. பெட்ரோல் பங்க்குகளும் நேற்று திறக்கப்பட்டிருந்தனு. இந்த ஊரடங்கு தளர்வு அறிவிப்பை போலீசார் மைக் மூலம் அறிவித்தனர். ஆனால் பள்ளிகள், அலுவலகங்கள் மூடியிருந்தன. அதேபோல், திப்ருகர் நகரில் நேற்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நேற்று காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை தளர்த்தப்பட்டது.

மம்தா எச்சரிக்கை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  விடுத்துள்ள அறிக்கையில், ‘மக்கள் அமைதி காக்க வேண்டும். சட்டத்தை தங்கள்  கையில் எடுத்து வன்முறையில் இறங்கக் கூடாது. பொது மக்களுக்கு இடையூறு செய்து,  அரசு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’  என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீகாரில் 21ம் தேதி பந்த்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பீகாரில் வரும் 21ம் தேதி பந்த் நடத்த ராஷ்டிரிய ஜனதா தள கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த அறிவிப்பை லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார். மதச்சார்பற்ற கட்சிகள், அரசியல் சாரா அமைப்புகள், அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை வரை இன்டர்நெட் ‘கட்’

அசாமில் வன்முறை பரவுவதற்கு வாட்ஸ் ஆப் போன்ற சமூக இணையதளங்கள் காரணமாக இருப்பதால், அங்கு இன்டர்நெட் சேவைகள் நிறுத்தப்பட்டன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க அசாமில் நாளை வரை இன்டர்நெட் சேவைகள் வழங்கப்படாது என கூடுதல் தலைமை செயலாளர்(உள்துறை) சஞ்சய் கிருஷ்ணா கூறினார்.

சுற்றுலா பயணிகளுக்கு பல நாடுகள் எச்சரிக்கை

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் வன்முறையை அடுத்து அங்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், கனடா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும்,  இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், எச்சரிக்கையுடன் இருக்கும்படி தங்கள் நாட்டு மக்களுக்கு வெளிநாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

ஜமியா பல்கலை 5 வரை விடுமுறை

மாணவர்கள் போராட்டம் காரணம் டெல்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஜனவரி 5ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அசாம் அமைப்புகள் வழக்கு


குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து அசாமை சேர்ந்த, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான அமைப்பு, அசோம் நகரிக் சமாஜ் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளன.  இது தொடர்பாக இந்த அமைப்புகளின் தலைவர்கள் நேற்று தனித்தனியாக அளித்த பேட்டியில், ‘வழக்கு தொடர்வது பற்றி எங்கள் வழக்கறிஞர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் வழக்கு தொடர்வோம்’ என்றனர்.

ராணுவம் எச்சரிக்கை


குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து, வடகிழக்கு மாநிலங்களில் பெரும் வன்முறை பரவி வருகிறது. இங்கு சுமார் 5,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிராக சிலர் போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ‘‘தீங்கு விளைவிக்கும் செய்திகள், தவறான பிரசாரங்கள்  சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும். பொய்யான செய்திகளை யாரும் கேட்க வேண்டாம். அதைக் கண்டுக்கொள்ளவும் வேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல் டேங்கர் எரிப்பு
டிரைவர் பரிதாப பலி


அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் டேங்கர் லாரி ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். காலியாக இருந்த அந்த லாரி, பெட்ரோல் நிரப்புவதற்காக நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது தேகியாஜுலி என்ற இடத்தில் அதை வழிமறித்த போராட்டக்காரர்கள், அதற்கு தீ வைத்தனர். தீ மளமளவென பரவியதில் டிரைவர் பலத்த காயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரைவர் நேற்று காலை உயிரிழந்தார்.

‘வடகொரியாவுக்கு போங்க’ மேகாலயா ஆளுநர் சர்ச்சை


குடியுரிமை சட்டத் திருத்தத்தால் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை பரவி கொண்டிருக்கும் நேரத்தில், மேகாலயா ஆளுநர் ததகதா ராய் டிவிட்டரில் ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டார். அதில், ‘‘தற்போதைய முரண்பாடான சூழ்நிலையில் இரு விஷயங்களை பார்க்காமல் இருக்க முடியாது. ஒன்று, ஒரு காலத்தில் நாடு மத ரீதியாக பிரிக்கப்பட்டது. இரண்டு, அவசியமான பிரிவினைதான் ஜனநாயகம். இதை நீங்கள் விரும்பவில்லை என்றால் வடகொரியா செல்லலாம்’’ என பதிவிட்டார். இதன்பின் போராட்டக்காரர்கள் ராஜ்பவனை முற்றுகையிட்டு பாதுகாப்பை மீறி உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

Tags : Burns ,Railway Station ,Assam , Fighting ,Civil Rights Amendment, Railway station burning, Internet , Assam till tomorrow
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே...