×

தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், ராமநாதபுரம், சேத்தி, கே.பிரிட்ஜ், அகரம் (பெரம்பலூர்) பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும், தரங்கம்பாடி, அனைக்கார சத்திரம், ராமேஸ்வரம், சீர்காழி, தீர்த்தானந்தம், வட்டமை, சிதம்பரம், தலா 8 செ.மீ., கோத்தகிரி, காட்டுமன்னார்கோவில், பரங்கிபேட்டை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தொண்டி ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென்தமிழக கடற்கரை பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.

இதனால், அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் நிலவும். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுவையில், கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் பதிவான மழையின் அளவு 42 செ.மீ ஆக உள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 36 செ.மீ. ஆகும். எனவே, வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13% அதிகமாக பொழிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

குமரிக்கடல் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Balachandran ,districts ,Thoothukudi ,Chennai Meteorological ,Sivagangai ,Meteorologist ,Chennai , Tamil Nadu, Puducherry, Rain, Chennai Weather, Center, Balachandran
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...