×

ஏர்டெல், ஜியோ, வோடபோன் கட்டணம் 42% வரை உயர்வு

புதுடெல்லி: அழைப்பு, டேட்டா கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தி ஏர்டெல், வோடபோன் - ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதில், ஏர்டெல், வோ நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஜியோ கட்டண உயர்வு 6ம் தேதி அமலாகிறது. ஜியோ இலவச சேவைக்கு பிறகு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாய் சரிந்தது. இதில் இருந்து மீளும் வகையில், டிசம்பர் மாதத்தில் இருந்து கட்டணத்தை உயர்த்தப்போவதாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கடந்த மாதம் அறிவித்தன. இந்நிலையில், வோடபோன் ஐடியா பிரீபெய்டு கட்டண உயர்வை நேற்று அறிவித்தது.

இதன்படி 2 நாள், 28 நாள், 84 நாள், 365 நாட்களுக்கான புதிய கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய கட்டணத்தை விட 42%  வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது நாளை (இன்று நள்ளிரவு 12 மணி) அமலுக்கு வரும். வோடபோனில் ஓராண்டுக்கான 1,699 என இருந்த கட்டணம் 41.2 சதவீதம் உயர்த்தப்பட்டு 2,399ஆகியுள்ளது. 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி 458 என இருந்தது 599 என உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் 199 பிளான் இனி 249 என இருக்கும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுபோல், ஏர்டெல் நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 50 காசு முதல் 2.85 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பிற நிறுவன ெதாலைபேசிக்கு பேச, இலவச அழைப்புகள் 1000 நிமிடம் முதல் 3000 நிமிடங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இதுபோல், ஜியோ நிறுவனமும் கட்டணங்களை 40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் 40 சதவீதம் வரை கூடுதலாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு 3 மடங்கு வரை கூடுதல் பலன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என ஜியோ தெரிவித்துள்ளது.

பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி?
இதுவரை சலுகை கட்டணத்தில் அளவற்ற அழைப்பு மற்றும் அதிக டேட்டா பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், தற்போது ஏதேனும் ஒரு பேக்கேஜ் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், கட்டண உயர்வு அமலுக்கு வரும் முன்பு அதே பேக்கேஜை ரீசார்ஜ் செய்தால் தப்பிக்கலாம். உதாரணமாக 84 நாட்களுக்கு ஒரு பேக்கேஜை நீங்கள் பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். அதே பேக்கேஜை கட்டண உயர்வுக்கு முன்பு ரீசார்ஜ் செய்து விட்டால், பேக்கேஜ் முடியும் நாளில் இருந்து மேலும் 84 நாட்களுக்கு பழைய சலுகையையே  தொடர்ந்து அனுபவிக்கலாம். சில நிறுவனங்கள் மட்டுமே இதை ஏற்றுக் கொள்கின்றன.  அதை வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Tags : Vodafone ,Airtel , Airtel, Jio, Vodafone charges up 42%
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...